

கோப்புப்படம்
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், தற்போது விநாடிக்கு 8,456 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,700 கனஅடி தண்ணீர் வந்தது. மாலையில் 8,041 கனஅடியாகவும் நேற்று காலை 7,790 கன அடியாகவும் நீர்வரத்து குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது நீர்வரத்து விநாடிக்கு 8,456 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 92.19 அடியாகவும், நீர் இருப்பு 55.18 டிஎம்சியாகவும் உயர்ந்தது.
இதேபோல் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக பதிவான நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவுடன் தொடர்ந்தது. ஆனால், நேற்று மதியம் 2 மணியளவில் விநாடிக்கு 8,500 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து நீர்வரத்து கணக்கிடப்பட்டு வருகிறது.