ராணிப்பேட்டை தொகுதியில் ராஜ்ஜியம் யாருக்கு?

ராணிப்பேட்டை தொகுதியில் ராஜ்ஜியம் யாருக்கு?
Updated on
2 min read

18-ம் நூற்றாண்டில் தேசிங்கு ராஜா மற்றும் அவரது மனைவி நினைவாக பாலாற்றின் வடகரையில், ஆற்காடு நவாப் சதாத்துல்லாகான் என்பவரால் உருவாக்கப்பட்டது ராணிப்பேட்டை நகரம். ஆங்கிலேயர் ஆட்சியில் முக்கிய படை பிரிவுகள் தங்கியிருந்த நகரம். வரலாற்று சிறப்பு முக்கிய இந்த நகரின் பெயரிலேயே கடந்த 1951-ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதி உருவாக்கப்பட்டது.

தொழிற்சாலைகள் நிறைந்தும், அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தோல் மற்றும் தோல்சார்ந்த தொழில்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். உலகின் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக ராணிப்பேட்டை உள்ளது. 1952-ம் ஆண்டு முதல் இதுவரை ஒரு இடைத் தேர்தல், 15 பொதுத்தேர்தல் என 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. தலா 3 முறை காங்கிரஸ், அதிமுக, சுயேட்சைகள் கைப்பற்றியுள்ளன. 7 முறை திமுக வென்றுள்ளது.

இந்த தேர்தலில் திமுகவில் அமைச்சர் ஆர்.காந்தி 7-வது முறையாக போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளர் கார்த்திகேயன் தாமரை சின்னத்திலும், தவெகவில் தாஹிரா, நாதகவில் தாரிக்கா உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுகவில் அமைச்சர் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவரது மகன் வினோத் காந்திக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

குடும்பத்துக்குள் நடந்த கோஷ்டி மோதலில் யார் வேட்பாளர் என்ற குழப்பம் வேட்பு மனுத்தாக்கலின் இறுதி நாள் வரை நீடித்தது. கடைசியில் மீண்டும் வேட்பாளரானார் அமைச்சர் ஆர்.காந்தி. தந்தைக்காக போட்டியில் இருந்து விலகுவதாக மகனும் மனமிறங்கினார்.

தேர்தல் களம்

தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நவல்பூர்-காரை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்தது, வாலாஜா அரசு மருத்துவமனை அருகே மேம்பாலம் என பல சாதனைகளை கூறி திமுகவினர் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணி வேட்பாளர் கார்த்திகேயன், தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் மேல்விஷாரத்தில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் பெற முடியாத நிலையுடன், ராணிப்பேட்டை அதிமுக நிர்வாகிகள் பலர் ஆற்காட்டில் மாவட்டச் செயலாளருக்கு வேலை செய்ய சென்று விடுவதால் திணறியபடியே வாக்கு சேகரித்து வருகிறார்.

நாதக வேட்பாளர் தாரிக்கா தனக்கான பாதையில் தேர்தலில் பிரச்சாரம் செய்வதுடன், தவெக வேட்பாளர் தாஹிரா தொகுதி மக்களுக்கு அறியாத முகமாக களத்தில் இருப்பதால் கடும் போட்டி இல்லாத களத்தில் திமுகவை கடுமையாக எதிர்த்து 5-வது நபராக சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார் முன்னாள் எம்எல்ஏ வாலாஜா ஜெ.அசேன். இஸ்லாமியர்களின் வாக்குகளை சிதறடிக்கும் பணியில் தாரிக்கா, தாஹிரா, அசேன் ஆகியோர் உள்ளனர். தொகுதியில் வன்னியர்கள் அதிகம் இருந்தாலும் முதலியார், யாதவர், நாயுடு உள்ளிட்ட பிற சமூகத்தினர் உள்ளனர். இருந்தாலும், தொகுதியின் வெற்றி தோல்வியை இஸ்லாமியர்களே தீர்மானிக் கின்றனர்.

நீண்ட நாள் கோரிக்கை

* நகரி - திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை முடிக்க வேண்டும்.

* ராணிப்பேட்டை சிப்காட்டில் தேங்கியுள்ள 2.50 லட்சம் மெட்ரிக் டன் குரோமியம் கழிவுகளை அகற்ற வேண்டும்.

* தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றில் கலப்பதை தடுத்து விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்.

* தென்னிந்தியாவின் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்ட வாலாஜா நகர ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

* ராணிப்பேட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, வாலாஜா தலைமை மருத்துவ மனையை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.

* தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜா நகராட்சியை மேம்படுத்த வேண்டும்.

* ராணிப்பேட்டை பிஞ்சி ஏரி உட்பட தொகுதியில் உள்ள மற்ற ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

* காஞ்சனகிரி மலையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.

* அனந்தலை கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

தொகுதியில் வென்றவர்கள்

  • 1952 காதர் ஷெரிப் - காங்கிரஸ்

  • 1957 சந்திரசேகர் நாயக்கர் - காங்கிரஸ்

  • 1962 அப்துல் கலீல் - திமுக

  • 1967 அப்துல் கபூர் சாஹிப் - சுயேட்சை

  • 1971 கே.ஏ. வஹாப் - சுயேட்சை

  • 1977 துரைமுருகன் - திமுக

  • 1980 துரைமுருகன் - திமுக

  • 1984 கதிர்வேலு - காங்கிரஸ்

  • 1989 அசேன் - சுயேட்சை

  • 1991 வேணுகோபால் - அதிமுக

  • 1996 ஆர்.காந்தி - திமுக

  • 2001 சந்திரசேகரன் - அதிமுக

  • 2006 ஆர்.காந்தி - திமுக

  • 2011 முகமது ஜான் - அதிமுக

  • 2016 ஆர்.காந்தி - திமுக

  • 2021 ஆர்.காந்தி - திமுக

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,20,173

  • பெண் - 1,28,026

  • மூன்றாம் பாலினத்தவர் - 45

  • மொத்த வாக்காளர்கள் - 2,48,244

ராணிப்பேட்டை தொகுதியில் ராஜ்ஜியம் யாருக்கு?
தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in