ராதாபுரம் தொகுதியில் ராஜபாட்டை நடத்தப்போவது யார்?

திமுக வேட்பாளர் மு.அப்பாவு

திமுக வேட்பாளர் மு.அப்பாவு

Updated on
3 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோர கிராமங்களை கொண்ட ராதாபுரம் தொகுதியில் திமுக, பாஜக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ந்துவரும் வணிக நகரான வள்ளியூர், பணகுடி, ராதாபுரம், திசையன்விளை போன்ற முக்கிய பகுதிகள் இத்தொகுதிக்குள் இருக்கின்றன. 10 கடலோர மீனவர் கிராமங்களும் இத்தொகுதியில் இருக்கின்றன.

மீனவர்கள் நவீன விசைப் படகுகள் இல்லாமல் பாரம்பரிய முறையில் நாட்டுப்படகுகளில் தற்போதுவரை மீன்பிடித்து வருகின்றனர். கூடங்குளம் அணுஉலைகள், மகேந்திர கிரியிலுள்ள ஐ.எஸ்.ஆர். திரவ இயக்க உந்தும வளாகம் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள். மேலும், இத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில்தான் அதிகளவில் காற்றாலைகள் இருக்கின்றன.

கல்குவாரிகள் அதிகம் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமான கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினை, ராதாபுரம் கால்வாயில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு போதிய அளவில் தண்ணீர் திறக்கப்படாமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்படாமல் உள்ளன.

பாஜக வேட்பாளர் பி.பாலகிருஷ்ணன்

பாஜக வேட்பாளர் பி.பாலகிருஷ்ணன்

23 வேட்பாளர்கள் போட்டி

இத்தொகுதியில் 1957 முதல் 2011 வரை நடைபெற்ற 15 தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, திமுக 3 முறை, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், அதிமுக தலா 2 முறை, தமாகா, தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இத் தேர்தலில் திமுக வேட்பாளராக தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு மீண்டும் களமிறங்கியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக பி.பாலகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மருத்துவர் சதீஷ் கிறிஸ்டோபர், நாம் தமிழர் கட்சி சார்பில் கிரிஜா நந்தினி குமாரி போட்டியிடுகின்றனர். மொத்தம் 23 வேட்பாளர்கள் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

வள்ளியூரில் பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, விஜயாபதியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு திடல், கூட்டு குடிநீர் திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தி திமுக வேட்பாளர் அப்பாவு வாக்கு சேகரித்து வருகிறார். 1996, 2001, 2006, 2021 தேர்தல்களில் இத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள அப்பாவு இம்முறை வெற்றி பெறுவதற்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தவெக வேட்பாளர் மருத்துவர் சதீஷ்

தவெக வேட்பாளர் மருத்துவர் சதீஷ்

சிறுபான்மையினர் அதிகமுள்ள இத்தொகுதியை பாஜக கேட்டுப் பெறுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த 2006 தேர்தலில் இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவு கேட்டு அத்வானி பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். அப்போது, தமிழிசைக்கு 7 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருந்தன.

இதுபோல், கடந்த 2011, 2016 தேர்தல்களிலும் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியிருந்த இன்பதுரை குறைந்த வாக்கு வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் அப்பாவுவிடம் தோல்வியை சந்தித்திருந்தார். இதனால், இத்தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு இருக்கும் செல்வாக்கை கருத்தில் கொண்டுதான் பாஜக இம்முறை இங்கு போட்டியிடுகிறது.

மேலும், இத்தொகுதியில் உள்ள கணிசமான சிறுபான்மையினர் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும்பட்சத்தில் அது திமுக கூட்டணிக்கு பாதகமாகவும், தங்களுக்கு சாதகமாகவும் இருக்கும் என்றும் பாஜக கணித்திருக்கிறது.

நாதக வேட்பாளர் கிரிஜா நந்தினி குமாரி

நாதக வேட்பாளர் கிரிஜா நந்தினி குமாரி

மீனவ மக்களின் வாக்கு

ராதாபுரம் தொகுதியில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வாங்குவங்கியாக கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன. இதனால்தான் பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் அளித்து மீனவர்களின் வாக்குகளை பெற அக்கறை செலுத்துகின்றனர்.

ஆனால், சமீப காலமாக கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு அதிகரித்து வருவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்துள்ளது. மேலும் கடலையும் கரையையும் பாதுகாக்க அனைத்து கடற்கரை கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சரிவர நிறைவேற்றப்படவில்லை.

விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு கடற்கரை கிராமங்களில் வரவேற்பு அதிகமுள்ளது. மீனவர்கள் வாக்குகள் மட்டும் 40 ஆயிரம் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த வாக்குகளை பெறுவதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது.

வாக்காளர்கள் விவரம்

• ஆண் - 1,21,596

• பெண் - 1,25,442

• மூன்றாம் பாலினத்தவர் - 23

• மொத்த வாக்காளர்கள் - 2,47,061

திமுக வேட்பாளர் மு.அப்பாவு

தமிழகத்தில் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in