ஆண்டிபட்டி தொகுதியில் நேருக்கு நேர் மோதும் அண்ணன், தம்பியால் அனல் பறக்கும் தேர்தல் களம்

‘விட்டுக் கொடு...’, ‘அதெல்லாம் விடவே முடியாது’
ஆண்டிபட்டி தொகுதியில் நேருக்கு நேர் மோதும் அண்ணன், தம்பியால் அனல் பறக்கும் தேர்தல் களம்
Updated on
1 min read

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அண்ணன் தம்பி வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி தொகுதியில் 2019, 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனும் போட்டியிட்டனர்.

இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர். இந்த இரண்டு தேர்தல்களிலும் மகாராஜனே வெற்றி பெற்றார். இந்நிலையில், இவர்கள் எதிரெதிரே களம் இறங்கி உள்ளனர். இம்முறை மகாராஜனின் வெற்றி ஹாட்ரிக் ஆக இருக்குமா? அல்லது லோகிராஜன் இந்த தடவை வெற்றியை கைப்பற்றுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பிரச்சாரங்களில் காரசாரமாக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். லோகிராஜன் தனது பிரச்சாரத்தின்போது பேசுகையில், கடந்த இரண்டு தேர்தல்களில் என்னிடம் துப்பாக்கி மட்டும்தான் இருந்தது. இந்த முறை 'தோட்டா' (அமமுக கூட்டணி) எங்களிடம் உள்ளது. அதனால் வெற்றி நிச்சயம். எனது அண்ணன் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகிவிட்டார்.

தம்பி மீது பாசம் இருந்தால் இந்த முறை எனக்காக அவர் விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால், விடாப்பிடியாக போராடி மீண்டும் சீட் வாங்கி வந்திருக்கிறார். இரண்டு முறை தோற்றவனுக்குத்தான் அந்த வேதனை வலி தெரியும். இந்த முறை நான் வெற்றிபெறாமல் விட மாட்டேன். என்று ஆவேசமாகவும், உருக்கமாகவும் பேசி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக மகாராஜன் தனது பிரச்சாரத்தில், வீட்டில்‌ எப்போதும் அண்ணனுக்குத்தான் முதல் மரியாதை. இரண்டு முறை ஜெயித்து விட்டேன் என்பதற்காக விட்டுக்கொடுப்பதற்கு அரசியல் ஒன்றும் குடும்பச் சொத்து கிடையாது.

துப்பாக்கியால் என்னைச் சுட்டுவிட்டு, அப்புறம் லோகிராஜன் பதவிக்கு வரட்டும். உங்கள் ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை சொல்லி வாக்கு கேளுங்கள் என்று அதிரடியாக பதிலளித்தார். இன்னொரு பிரச்சாரத்தில் லோகிராஜன், ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்காக எனது இடத்தையே விட்டுக் கொடுத்தேன். இன்று லட்சக்கணக்கானோர் அந்த இடத்தில் சிகிச்சை பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

இதற்கு பதிலடியாக அவரது அண்ணன் மகாராஜன், அந்த இடத்தின் விலை அப்போது சென்ட ரூ.200 தான். பொள்ளாச்சியில் நீ வேலை பார்த்தபோது இங்கு வந்து ஒப்பந்த வேலை செய்வதற்காக நான் விட்டுக் கொடுத்த இடம்தான் இது. அந்த வகையில் அது எனது நிலம்தான் என்று கூறினார். கடந்த 2 தேர்தல்களையும் விட இம்முறை இருவரின் தாக்குதல்களும், குமுறல்களும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டிபட்டி தொகுதியில் நேருக்கு நேர் மோதும் அண்ணன், தம்பியால் அனல் பறக்கும் தேர்தல் களம்
தமிழகத்தில் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in