

தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
சென்னை: இணையவழி நிதி மோசடிகளை தடுக்க மியூல் வங்கிக் கணக்குகளை கண்காணிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தினார்.
இணையவழி நிதி மோசடிகளை தடுப்பது, மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பது தொடர்பாக, வங்கி அதிகாரிகளுடன் தமிழக காவல்துறை சார்பில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இணையவழிக் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மொடக் உள்ளிட்ட அதிகாரிகளும், வங்கிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில், மோசடிக்குப் பயன்படுத்தப்படும் மியூல் வங்கிக் கணக்குகளை (மோசடி நபர்கள் மற்றவர்களின் பெயரில் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகள்) கண்டறிந்து கண்காணிக்கவும், சந்தேகத்துக் குரிய பரிவர்த்தனைகளை ஏபிஐ தொழில்நுட்பம் மூலம் முடக்கவும் டிஜிபி அறிவுறுத்தினார்.
ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்குகள் மோசடிக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, உரிய தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை வங்கிக் கிளைகள், ஏடிஎம் மையங்கள், இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.