

முதல்வர் விஜய்
சென்னை: தமிழ்நாடு நாள் (ஜூலை 18) மற்றும் மெட்ராஸ் மாநிலமாக உருவான நவ.1-ம் தேதியையும் தவெக அரசு கொண்டாடும் என தெரிவித்துள்ளார்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்த மாநிலத்தை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. 1967-ம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணா, ஜூலை 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற் றினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று 2022-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 2019-ம் ஆண்டு முதல் நவ.1-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்று அப்போதைய அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வந்தது.
அதேநேரம், நவ.1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள். எனவே அன்றைய தினம் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றதால், அந்த நாளை மாநில உருவாக்க நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்ற கோரிக்கை எழுந்ததால், ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என 2022-ல் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலி னால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ‘தமிழ்நாடு நாள்’ நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் விஜய்: தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ம் நாளையும், ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டஅண்ணாவால் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ம் நாளையும் இந்த அரசு கொண்டாடும். சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும்,சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மைமாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்குவோம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: 1956-ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது திமுக. முதல்வரான அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள். தமிழ்த்தாயின் ஏக்கம் தீர அண்ணா ‘தமிழ்நாடு’ என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் ‘வாழ்க’ என வாழ்த்திமகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: தமிழர்கள் வாழும் பகுதிக்கு ‘தமிழ்நாடு’ என்றுகூட பெயர் சூட்ட முடியவில்லையே என்ற பெரியாரின் ஏக்கத்தையும், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், தமிழ் பெரியோர்கள் பலரின் விருப்பத்தையும் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றிக் காட்டியது நம் திமுக. மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: தமிழ்நாடு நாள் வாழ்த்துகள். நம் மொழி, பண்பாடு, பாரம்பரியம் என்றென்றும் செழித்தோங்கட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.