

திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் இது முக்கியமான தேர்தல். ஆனால், பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் இந்தத் தேர்தல் 2029 மக்களவைத் தேர்தலுக்கான அடித்தளம். அதனால் தான் இரண்டு கட்சிகளுமே இந்தத் தேர்தலில் தங்களுக்கான வாக்கு வங்கியை உயர்த்திக் காட்ட, அதிக தொகுதிகளும் அதிகாரத்தில் பங்கும் கேட்டு கூட்டணிக் கட்சிகளை உலுக்கி எடுத்து வருகின்றன.
இதில், அதிமுக-வை பாஜக எந்த விதத்திலெல்லாம் தங்களின் வழிக்குக் கொண்டுவரப் பார்க்கிறது என்பது தெரிந்த கதைதான். அதே வழியில் காங்கிரஸும் இப்போது திமுக-வுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம்... பாஜக அதிகாரத்தை வைத்து அதட்டிப் பார்க்கிறது; காங்கிரஸ் விஜய்யை வைத்து மிரட்டிப் பார்க்கிறது.
கடந்த சில வருடங்களாகவே, ‘அதிகாரத்தில் பங்கு’ எனும் குரல் தமிழக காங்கிரஸுக்குள் சன்னமாக ஒலிக்க ஆரம்பித்து விட்டது. விஜய் அரசியலுக்கு வந்ததும் அது சத்தமாகவே கேட்க ஆரம்பித்து விட்டது. காங்கிரஸில் எம்எல்ஏ சீட்டை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் எல்லாம் சற்று அடக்கி வாசிக்கிறார்கள். திமுக தயவில் எம்.பி.யாகி இருக்கும் சிலர், “காங்கிரஸ் வளர்ச்சிடைய வேண்டு மானால் அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும்” என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இவர்களில் சிலர், இந்த விஷயத்தை பிடிவாதமாகப் பேசுவதற்கு கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக-வினருடன் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் ஒரு முக்கியக் காரணம்.
ஆட்சியில் பங்கு கேட்கும் எம்.பி.க்களுக்கு, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் எந்த நிலைக்குப் போனாலும் கவலையில்லை. ஆனால், அவர்கள் களமிறங்கப் போகும் 2029 தேர்தலில் காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும்; தாங்கள் கேட்டதைக் கொடுக்கும் வலுவான கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கவலை. அதற்காகத்தான். போதும் திமுக; போய்ப் பார்க்கலாம் விஜய்யிடம் என இவர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்துப் பேசியபோதே டெல்லி காங்கிரஸ் தலைமை உரிய நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இவ்வளவு தூரம் இந்த விவகாரம் வளர்ந்திருக்காது. வழக்கம் போல் இதையும் டெல்லி வேடிக்கை பார்த்ததால் ஆட்சியில் பங்கு கோரிக்கை வலுத்துள்ளது.
ஆட்சியில் பங்கு கேட்பவர்களுக்கு, ‘ஜனநாயகனுக்கு’ ஏற்படுத்தப்பட்ட சென்சார் சிக்கல் நல்வாய்ப்பாக அமைந்து போனது. அதை வைத்துக் கொண்டு மத்திய பாஜக அரசைக் கண்டிக்கும் சாக்கில் விஜய்க்கு ஆதரவுக் கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வலைதளமே இதை பிரதானப்படுத்தி பேசி இருக்கிறது. ஆனால், கலைஞனின் படைப்புச் சுதந்திரத்தைப் பறிப்பதாக ‘ஜனநாயகனுக்கு’ நியாயம் கேட்கும் காங்கிரஸ், இதே சிக்கலைச் சந்தித்த உதயநிதி தரப்பினரின் ‘பராசக்தி’ பற்றி பேச மறுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக இருக்கும் கட்சி தான் திமுக. அந்தக் கட்சி வைத்திருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை தான் காங்கிரஸுக்கு இப்போது எக்ஸ்ட்ரா பலம். அதனால், மாநிலத்தில் திமுக-வுக்கு பக்க துணையாக இருக்கிறது காங்கிரஸ். அதேசமயம் காலத்துக்கேற்ப தன்னை திமுக மாற்றிக் கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சிகளுமே அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சை எடுக்கும் போது திமுக-வும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் அழுத்தமாக பேசுவது அவர்களின் குரலாக மட்டும் தெரியவில்லை. டெல்லி தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் இவர்கள், டெல்லியின் எண்ணவோட்டம் தெரிந்தே இப்படிப் பேசுகிறார்கள்” என்கிறார்கள் அவர்கள்.