

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகள் கொடுக்கப்பட்டு விட்டன என மாநில வனம் மற்றும் காதித் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசை பாராட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணியில் சேருவாரா என்பது குறித்தும், வேறு கட்சிகள் இணைவது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். இம்மாத இறுதியில் கூட்டணி தொடர்பான முடிவை அவர் அறிவிப்பார்.
காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதிகள் கொடுக்கப்பட்டு விட்டன. கூடுதலாக கேட்கும் தொகுதிகள் குறித்து திமுக தலைவர் முடிவு எடுப்பார். காங்கிரஸில் ஆயிரம் பேர் ஆயிரத்தெட்டு கருத்துக்களை சொல்வார்கள். காங்கிரஸ் கட்சியில் உள்ள எல்லோருடைய கருத்தையும் கேட்க முடியாது. கட்சியின் தலைவருடன் பேசி திமுக தலைவர் முடிவெடுப்பார்.
இந்தியாவில் அதிக வனப்பரப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தற்போது மலைப்பகுதியில் 3,000 ஏக்கரில் வனப்பரப்பு அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்குள் இலக்கு எட்டப்படும்.
பொதுமக்கள் போராடினால் யோசிக்கலாம். தங்களது தேவைக்காக போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைப் பற்றி தமிழக முதல்வர் பார்த்துக் கொள்வார் என்றார்.