

சென்னை: வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘தமிழ் நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள். மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, 'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் திருவுருவச்சிலை அமைத்தோம்.
தமிழ் நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.