தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.274 கோடியில் பள்ளி, நூலகம், காவல் நிலையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.274 கோடியில் பள்ளி, நூலகம், காவல் நிலையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.273.79 கோடியில் கட்டப்பட்ட பள்ளி, விடுதி கட்டிடங்கள், நூலகங்கள், காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் 20மாவட்டங்களில், 60 அரசுப் பள்ளிகளில் ரூ.96.49 கோடியில் 392 புதிய வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், 16 கழிப்பறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டு, 8 குடிநீர் வசதிப் பணிகளும் செய்யப்பட்டுள்ளன.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.113.68 கோடியில் 2 மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டிடங்கள், விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

நூலகக் கட்டிடங்கள்: பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.17.82 கோடியில் 20 மாவட்டங்களில் 68 நூலகக் கட்டிடங்கள், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.1.90 கோடியில் 3 கிளை நூலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்துக்கு ரூ.4.40 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

காவல் துறை கட்டிடங்கள்: சென்னை மாவட்டம் - சிந்தாதிரிப்பேட்டையில் மகளிர் காவலர் விடுதி, கிருஷ்ணகிரியில் காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காவலர் பாளையம் என ரூ.22.09 கோடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதுதவிர, கோயம்புத்தூர் – நீலாம்பூர், சிவகங்கை – கீழடி, திருநெல்வேலி – மேலச்செவல், திருப்பூர் – பொங்கலூர், கள்ளக்குறிச்சி – களமருதூர், நாமக்கல் – கொக்கராயன்பேட்டை, மதுரை மாநகரம் – சிந்தாமணி, மாடக்குளம், தருமபுரி – புலிக்கரை ஆகிய இடங்களில் புதிதாக 9 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

3 புதிய காவல் உட்கோட்டங்கள்: காஞ்சிபுரம் – உத்திரமேரூர், நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி, நாமக்கல் – பள்ளிப்பாளையத்தில் 3 புதிய காவல் உட்கோட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை– செங்குன்றத்தில் 53 பணியாளர்கள் குடியிருப்புகள், தீயணைப்பு நிலையம் என ரூ.16.96 கோடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சிறைத் துறை சார்பில் சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் 3,300 சதுர அடியில் ரூ.68.47 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் பார்வையாளர்கள் காத்திருப்பு கூடம் கட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ரூ.4.17 கோடியில் ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், டிஜிபி (பொறுப்பு) அபய்குமார் சிங், துறை செயலர்கள் தீரஜ்குமார் (உள்துறை), பி.சந்திரமோகன் (பள்ளிக்கல்வி), பொது நூலக இயக்குநர் ச.ஜெயந்தி, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால், காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் வினித்தேவ் வான்கடே, சிறைத் துறை இயக்குநர் மகேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.274 கோடியில் பள்ளி, நூலகம், காவல் நிலையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வங்கதேசத்தில் 10 நாள் இடைவெளியில் மீண்டும் ஒரு தாக்குதல்: மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in