

தலைமைச் செயலர் எம்.சாய்குமார்
சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து கடந்த ஒரு வாரத்தில் 4 முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக தீபாவளி பண்டிகையை ஒட்டிய 2 நாட்களில் மாநிலம் முழுவதும் 13 கொலைகள் நடைபெற்றன. இதையடுத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய், உயரதிகாரிகளுடன் கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் ஆலோசனை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அவருடைய அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்தார்.
இந்த சந்திப்பு சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கையை ஆளுநர் அர்லேகர் சமர்ப்பித்ததாகவும், அதில் சமீப காலமாக மாநிலத்தில் நிகழ்ந்த குற்றங்கள், அவற்றின் மீது மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்றும் நடைபெற்றது.
தலைமைச் செயலர் எம்.சாய்குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறைச் செயலர் ஏ.கார்த்திக், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இதில் ஏற்கெனவே நடைபெற்ற ஆலோசனைகளில் விவாதிக்கப்பட்ட சட்டம் - ஒழுங்கு நிலவரம், கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல் துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சர்ச்சையாகி இன்னும் முடிக்கப்படாத வழக்குகளின் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.