

கடந்த 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து, ரூ.2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், மாநில தென்னை நாற்று மையம் நிறுவுதல், செயல் விளக்கத் திடல் அமைத்தல், இயற்கை உரக்கூடாரம் அமைத்தல், தென்னந்தோப்புகளில் மறுநடவு மற்றும் புத்தாக்கம் ஆகிய இனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 17,860 ஹெக்டரில் ரூ.54 கோடியில் மேற்கொள்ளப்பட்டு 26,800 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின்சார அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுடன் கூடிய 2,115 ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள், ரூ.122 கோடியில் 100 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நெல், கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. 2025-26 குறுவை கொள்முதல் பருவத்தில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.156-ம், சாதாரண ரகங்களுக்கு ரூ.131-ம் ஊக்கத்தொகையாக வழங்கி, அவற்றின் கொள்முதல் விலை முறையே ரூ.2,545 மற்றும் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 186 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் திட்ட செயலாக்க துறைக்கு ரூ.17,088 கோடி
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேவையான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.86 கோடியில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு 16,798 விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த 5,403 விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.176 கோடி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2025-ம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழக மாணவர்கள் 59 பேரில் 52 பேர் ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகளாவர். ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ எனும் திட்டத்தின்கீழ் ரூ.15,467 கோடியில் 1,410 பணிகள் எடுக்கப்பட்டு, 1,394 பணிகளுக்கு ஆணைகள் வெளியிடப்பட்டு, 808 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதர 586 பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடைக்கால பட்ஜெட்டில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடுமுதியோர் ஓய்வூதியம் உட்பட அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் வருவாய்த் துறையின் கீழ் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.