திமுகவின் அழிவில்தான் தமிழகத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது: பாஜக

திமுகவின் அழிவில்தான் தமிழகத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது: பாஜக
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தின் இருண்ட காலம் திமுக ஆட்சி என்றும் திமுகவின் அழிவு காலத்தில் தான் தமிழகத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது” என்றும் தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் எதிர்காலம் திமுக தான் என்று திருவண்ணாமலை கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நிறைவேறாத கனவை கூறி இருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் போர்க்கொடி தூக்கி கேள்விகள் கேட்பதால் பயமும், பதட்டமும் அதிகமாகி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சவால் விடுவது போல பேசி உள்ளார்.

திமுகவின் அழிவு காலத்தில் தான் தமிழகத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின், அமித் ஷாவுக்கு அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம்? என்று திமுக மேடையில் தேர்தல் அரசியலுக்காக கூச்சலிடுகிறார்.

பாஜக பிஹார் தேர்தலில் மகத்தான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுவிட்டது. கேரளாவில் கம்யூனிஸ்டுகளை வீழ்த்தி உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றியை பெறப்போகிறது என்பதை நன்கு உணர்ந்து, சங்கிப்படையையே கூட்டி வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்று நடிகர் வடிவேலு பாணியில் வீர வசனம் பேசுகிறார்.

தமிழக இளைஞர்களின் வாழ்வை சீரழித்து வரும் போதை கலாச்சாரம், தமிழக பெண்களின் தாலி கயிற்றை அறுக்கும் டாஸ்மார்க் வியாபாரம், ரியல் எஸ்டேட் கொள்ளை, செம்மண், சவுடு கருங்கல் என ஒட்டுமொத்த மண்வளத்தையும் திருடி நீர் ஆதாரத்தை அழித்து வரும் கனிம குவாரி ஊழல், பள்ளிக்கரணை சதுப்புநில ஊழல், சென்னை வெள்ள நிவாரண கால்வாய் ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் ஆட்சி செய்து வரும் திமுக அரசின் வேதனைகளை சாதனைகள் போல் துணிந்து நாடக அரசியல் செய்து வரும் முதல்வர் ஸ்டாலினின் மக்கள் விரோத தேர்தல் விளம்பர அரசியல் இனி எடுபடாது.

தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டிய ஆட்சி என்பதை உணராமல், திமுக அரசின் தவறுகளை, தமிழகத்துக்கு இழைத்த துரோகங்களை மறைத்து முதல்வர் ஸ்டாலின் பாஜக கட்சியையும் ஆட்சியையும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் மீது பொய்யான அவதூறு பிரச்சாரத்தை அரசு மேடைகளிலும் கட்சி மேடைகளிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவின் அழிவில்தான் தமிழகத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது: பாஜக
“பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்த ராகுல், கார்கே மன்னிப்பு கோர வேண்டும்” - கிரண் ரிஜிஜு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in