

புதுடெல்லி: பிரதமரை மிரட்டும் வகையிலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, ‘‘நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் பிரதமர் மோடியை மிரட்டினர்; அவருக்கு சமாதி தோண்டப்படும் என கூறினர்; அவரது உயிருக்கே அச்சுறுத்தல் விடுத்தனர். இதுபோன்ற தரம்தாழ்ந்த கருத்துகளை நாங்கள் கேட்டதில்லை.
காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் சித்தாந்தத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ராகுல் காந்தி இடதுசாரி சித்தாந்தத்தையோ அல்லது அவரது கட்சி விரும்பும் வேறு எந்த சித்தாந்தத்தையோ பின்பற்றலாம். ஆனால், நாம் நாட்டுக்காக பணியாற்றுகிறோம். காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பிரதமரின் உயிரைப் பறிப்போம், அவரது சமாதியை தோண்டுவோம் என்றெல்லாம் கூறுவது இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் துரதிருஷ்டவசமானது.
நாம் அனைவரும் போட்டியாளர்கள்தான்; எதிரிகள் அல்ல. நாம் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள். ஆனால், நாம் தேசத்துக்காகவே உழைக்கிறோம். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தியாவை வலிமையானதாகவும், பெருமைமிக்கதாகவும் மாற்றுவதே பிரதமர் மோடியின் கனவு.
நாங்கள் ஒருபோதும் யாருடைய பெற்றோர்களையும் அவமரியாதை செய்தது இல்லை. யாருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்தது இல்லை. ஜனநாயகத்தில் அரசியல் அனுமதிக்கும் வகையில் நாங்கள் உங்களை (எதிர்க்கட்சிகளை) விமர்சிக்கிறோம், உங்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிக்கிறோம். ஆனால், யாரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் ஒருபோதும் இருந்தது இல்லை.
அவருக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்கள் கவலை அளிப்பவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய பேச்சுக்களை வெறுமனே கண்டிப்பதால் பயனில்லை. தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அந்தந்த அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவர்களிடம் மனிதாபிமானம் மீதமிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை இருந்தால் அவர்கள் தாமதிக்காமல் மன்னிப்பு கோர வேண்டும். அப்போதுதான் நாங்கள் இதை ஒரு தவறாகக் கருதுவோம். எந்த ஒரு விஷயம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டு பிரதமரை திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மக்களவையில் பேசிய கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சித் தலைவர் மன்னிப்பு கோர வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.