

பாஜக அலுவலகம்
சென்னை: அரசு ஊழியர்கள் இனியும் ஏமாற வேண்டாம் எனவும், மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தை நகலெடுத்து, அந்த திட்டத்தில் ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்காக ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை’ அறிவித்தார். அதில் கடைசி மாதச் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு, பணிக்கொடை எனப் பல சிறப்பம்சங்கள் இருந்தன.
தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டமும் அதே அம்சங்களைக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தைச் சாடிய முதல்வர், இன்று அதையே தனது திட்டம் போலக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்.
2021 தேர்தலின் போது, “பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது அந்த வாக்குறுதியைத் துரோகம் செய்துவிட்டு, புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போராட்டங்களை ஒடுக்கிவிட்டு, இப்போது அவர்களின் வாயில் ‘கொழுக்கட்டையை’ வைத்து அடைக்கப் பார்க்கிறது இந்த அரசு.
தமிழக அரசின் இந்த அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லை. இத்திட்டம் எப்போது அமலுக்கு வரும்? முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்? அரசின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?
இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அதிகாரிகள் மழுப்பி வருகின்றனர். 16 லட்சம் ஊழியர்களில் 5 லட்சம் பேருக்குக் கூடப் பயன் தராத இந்தத் திட்டத்தை ‘சமத்துவம்’ என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. அரசு ஊழியர்கள் இனியும் ஏமாற வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.