

நடிகர் விஜய் | கோப்புப் படம்
சென்னை: “நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு கூற்றை நிரூபியுங்கள்” என பிரதமர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை குறி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கிரிஷ் சோடங்கர்
அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்யின் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம்.
பிரதமர் மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும், தணிக்கை வாரியத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தவெகவுடன் தமிழக காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வரும் சூழலில், ‘ஜனநாயகன்’ தணிக்கை பிரச்சினையில் தமிழக் காங்கிரஸ் கட்சியினர் விஜய்க்கு அழுத்தமாக குரல் கொடுத்து வருவது கவனிக்கத்தக்கது.