

படம்: ஜெ.மனோகரன்
கோவை: கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் வடவள்ளியில், ’நம்ம ஊரு மோடி பொங்கல்’ இன்று (ஜன.11) நடந்தது. இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழர் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு பங்கேற்றார்.
பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தர ராஜன், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். இதில் 120 பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் வள்ளிக்கும்மி, சிலம்பம், பரதம், ஜமாப் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் மேடையில் பொங்கல் வைத்து வழிபட்டார்.
தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த செயல் தலைவர், கண்களை துணியால் கட்டி கொண்டு உறியடி விளையாட்டில் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போலவே, பிஹாரிலும் சேட் திருவிழா பண்டிகை பாரம்பரிய கலாச்சாரத்துடன் கொண்டாடப்படுகிறது என்பதை செயல் தலைவர் பகிர்ந்து கொண்டார்.
படம்: ஜெ.மனோகரன்
முன்னதாக, மேடையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “வட இந்திய தலைவர்களும் இங்கு வந்து, நாம் பொங்கல் கொண்டாடுவதை பார்க்க வேண்டும் என்பதற்காக பாஜக சார்பில் இந்த பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், ”திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவிப்பதில்லை. பொங்கல் பண்டிகையின்போது மட்டும், சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வருகிறார். அதன் பின்னர் தேர்தல் பணிகள் வேகம் எடுக்கும்” என்றார்.
படம்: ஜெ.மனோகரன்
பூத் வெற்றி - பாஜகவின் வெற்றி: தொடர்ந்து, கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது தேர்தல் வியூகங்கள் சிலவற்றை அறிவுரையாக முன்வைத்தார்.
அவர் பேசும்போது, ”ஒரு சாதாரண பூத் தலைவர் தேசிய தலைவராகலாம். இது பாஜகவில் மட்டும் தான் முடியும். பாஜக தேசியத்தை முதன்மைப்படுத்தி ஆட்சி செய்கிறது.
தேசியத் தலைவரும், மண்டலத் தலைவரும் ஒன்றாக நிற்பது தான் இந்த பாஜக மேடை. ஒவ்வொருவருடைய பூத்தில் நீங்கள் வெற்றி பெற்றால், தேர்தலில் பாஜக வெற்றி பெறும். தமிழ்நாட்டை ஆளும் திமுக திரும்பிய பக்கமெல்லாம் ஊழலில் திளைக்கிறது. குடும்பத்தின் ஆட்சி நடக்கிறது. பெண்களிடம் கேட்டால் டாஸ்மாக் தொடங்கி போதை பழக்கம் வரை ஆளும் திமுக மீது பிரச்சினைகளை அடுக்குகின்றனர்.
படம்: ஜெ.மனோகரன்
நம்முடைய கட்சியினரை கேட்டால் கூட்டத்துக்கு வருகிறார்கள். ஆனால் களத்தில் யாரும் இல்லை என்கிறார்கள். பூத் அமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். பூத் அளவில் பாஜக வலிமை பெறும்போது நிச்சயம் அங்கு நமக்கு வாக்குகள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி வானொலியில், ’மனதின் குரல்’ நிகழ்வில் பேசுகிறார். இதனை நாம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அவர்களை ஓரிடத்தில் திரட்டி, நம்முடைய சாதனைகளை சொல்லும் நேரத்தில், ஆளும் திமுக அரசின் குறைகளை நாம் பொதுமக்களிடம் சொல்ல முடியும்.
திமுக அரசுக்கு எதிராக கடும் போராட்டத்தை கையிலெடுப்போம். உள்ளூர் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோம். வரும் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேலை செய்ய வேண்டும்.
படம்: ஜெ.மனோகரன்
தேர்தலுக்கு இன்னும் 90 நாட்கள் உள்ளன. இதில் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேளையில், திமுகவின் அட்டூழியங்களை எடுத்து சொல்ல வேண்டும். வரும் தேர்தலில் திமுகவை இந்த மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும்” என்று நிதின் நபின் பேசினார்.