‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைய இபிஎஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ - பாஜக

‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைய இபிஎஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ - பாஜக
Updated on
3 min read

சென்னை: ‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைய அதிமுக பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைய அதிமுக பொதுச்செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதுணையாக இருக்க வேண்டும்.

இருமொழிக் கொள்கையில் திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்வர் என்று உண்மையை உரக்கக் கூரிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைவதால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி முழுமையாக ஆராய அதிமுக சார்பில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

45 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் மக்கள் விரோத காங்கிரஸ் அரசு இருந்தபோது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்ஜிஆர், காங்கிரஸ் ஒரு தீய சக்தி என்பதை உணர்ந்து, காங்கிரஸ் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல், அன்றைய தமிழக சூழ்நிலை, அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.

இன்று மத்திய மோடி அரசு இந்தியை திணிக்கும் அரசு அல்ல. தமிழை போற்றி வளர்க்கும் அரசு. தமிழக மாணவர்கள் முதலில் தாய் மொழி தமிழை கற்க வேண்டும் என்று சட்டம் இயற்றிய அரசு. தமிழக மாணவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைவருமே தமிழை கற்றுக்கொண்டு தமிழின் தொன்மையை வளமையை பெருமையை அறிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

தற்போது நடந்து வரும் காசி தமிழ் சங்கமத்திலும் காசிக்கு தமிழ் கற்க வாருங்கள் என்று தமிழ் அன்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் வரலாற்று பெருமையுடன் கூடிய வேண்டுகோளை பாரத மக்களுக்கு விடுத்துள்ளார். தமிழக மாணவர்கள் தமிழை கற்க வேண்டும். ஆங்கிலமும் கற்கலாம் தாங்கள் விரும்பும் ஏதேனும் ஒரு மொழியையும் கற்கலாம் இதுதான் மத்திய மோடி அரசின் மும்மொழிக் கொள்கை.

இதன் மூலம் தமிழகத்தில் வாழும் ஆந்திர, கேரளா, கர்நாடக, வட இந்திய மக்கள் உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களும் தமிழை கற்க முடியும். ஆங்கிலம் படிக்கலாம். தங்களுடைய தாய் மொழியையும் மகிழ்ச்சியுடன் கற்கலாம் என ஒவ்வொரு குழந்தையும் தாய் மொழியை கற்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் பாஜக அரசின் மும்மொழிக் கொள்கை.

மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியில், அன்றைய சூழ்நிலையில் இரு மொழி கொள்கை என்ற முன்னெடுப்பை திராவிட கட்சிகள் அரசியலில் முன்வைத்தன. தற்பொழுது மக்களின் நலன் காக்க தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு ஆட்சி நடத்தும் நரேந்திர மோடி எந்த மொழியையும் எவரும் திணிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதேசமயம் இந்திய அரசியல் சாசனப்படி தன் தாய் மொழியோடு, தான் விரும்பும் மொழியை கற்க அளிக்கப்பட்ட உரிமையை மாணவர்களுக்கு வழங்கவே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பு என்று கற்பனை கபட நாடக மொழி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இனி தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எந்த மொழியும் திணிக்கப்படாது. அனைவரும் தாய்மொழி கல்வி கற்கக்கூடிய உரிமையை பெறவேண்டும் என்கிற உறுதியுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

மக்கள் விரோத காங்கிரஸுக்கும் மக்கள் நலம் காக்கும் மோடி அரசுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே நாமெல்லாம் வணங்கி மகிழ்ந்து போற்றும் எம்ஜிஆர் இன்று உயிரோடு இருந்திருந்தால் பிரதமர் மோடியோடு கரம் கோர்த்து மும்மொழிக் கொள்கையை மகிழ்ச்சியுடன் வரவேற்று இருப்பார்.

செல்லும் இடம் எல்லாம் தமிழ் அன்னைக்கு பெருமை சேர்த்து வரும், திருவள்ளுவர் வழியில் திருக்குறள் நெறியில் ஆட்சி நடத்தி வரும் தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக வாழ்ந்து வரும் தமிழ் குடிமகன், நரேந்திர மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தமிழ், தமிழர், தமிழகத்தின் நலம் காக்கும் அரசு என்பதால், தாய்மொழி தமிழை முதல் நிலையில் கற்பிக்கக் கூடிய நமது பள்ளிகள் தமிழகத்தில் அமைய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளிக்க வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உருவாக்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாஜக அதிமுக கூட்டணியின் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக முதல்வராக பதவி ஏற்க உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாயுள்ளத்துடன் தமிழக ஏழை கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்த வேண்டும்.

தற்பொழுது உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் இந்தி திணிப்பு, இரு மொழிக் கொள்கை என்கிற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்யான வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படக் கூடாது, கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி மேம்பாட்டு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் விரைந்து அமைத்திட ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசின் கல்வித் திட்டங்களில் அரசியலைப் புகுத்தி தேர்தல் அரசியலுக்காக, ஜவஹர் நவோதயா வித்யாலயா, பிஎம் ஸ்ரீ பள்ளிகள், நீட் தேர்வு திட்டம் மற்றும் இந்திய மாணவர்களின் மறுமலர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை திட்டங்களை எந்தவித அடிப்படை காரணம் இன்றி எதிர்த்து தமிழக மாணவர்களின் நலனை புறக்கணிக்கும் சூழ்நிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்தியா முழுவதும் கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்து வகையில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே உச்ச நீதிமன்றத்தின் ஆணையை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக கிராமப்புற மாணவர்களின், பட்டியலின - பழங்குடி மாணவர்களின், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதில் அதிக அக்கறையுடன் உருவாக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, தமிழகத்தில் மட்டும் கிடப்பில் போடப்பட்ட அற்புத கல்வித் திட்டமான, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பதற்கு, சமூக நீதியை காப்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

மேலும் தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தக்கூடிய ஒரு அற்புத வாய்ப்பாக இந்த நீண்ட நெடிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நல்லெண்ணத்துடன் பரிந்துரை செய்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக கிராமப்புற ஏழை மாணவர்கள், பெண் குழந்தைகள், பட்டியலின மாணவர்கள் வாழ்க்கையில், கல்வியில் இந்தியா முழுவதும் மறுமலர்ச்சி உருவாக்கி இருக்கின்ற நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க அனைவரும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" இவ்வாறு ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைய இபிஎஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ - பாஜக
“திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” - ஈரோட்டில் விஜய் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in