“விஜய் வாக்குகளை பிரிப்பார் என தவெக மீது திமுகவுக்கு பயம்” - கரு.நாகராஜன் கருத்து

கரு.நாகராஜன் 

கரு.நாகராஜன் 

Updated on
2 min read

திருநெல்வேலி: “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தலில் வாக்குகளை பிரிப்பார் என திமுகவுக்கு பயம் வந்துள்ளது” என்று தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கருத்து தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கலந்துகொள்வதற்கு வாய்ப்புள்ளது. யார் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் தமிழக தலைவர் மூலம் வெளியிடப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 125 நாட்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ஏழை மக்கள் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக திமுக திட்டமிட்டு சதிசெய்து பொய் பிரச்சாரம் செய்கிறது.

இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தும்போது அறுவடை, விதைப்பு, நடவு காலங்களில் விவசாயத் தொழில் பாதிப்பு இல்லாமல் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் திமுக அரசு இந்த திட்டத்துக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். ஆனால் மக்களை முட்டாளாக்கி ஏமாளிகளாக்க காங்கிரஸும், திமுகவும் நினைக்கிறது.

ரயில் கட்டணத்தை உயர்த்தி விட்டதாக திமுக திட்டமிட்டு பேசி வருகிறது. பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்காக ஆம்னி பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்னி பஸ் கட்டணங்களை குறைப்பதாக சொல்லி வருகிறார். ஆனால், இத்தனை ஆண்டுகளில் ஒருநாள் கூட கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கவில்லை.

சென்னையில் ரூ.5, ரூ.10 போன்ற கட்டணங்களில் இன்றளவும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஆம்னி பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களது வசூலை மட்டுமே கணக்கில் கொண்டு பணி செய்கிறார்கள்.

வட மாநிலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நடந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்டபோது தமிழக முதல்வர் அதை கண்டிக்கவில்லை. இப்படி இருக்கும்போது அவர் எப்படி மதச்சார்பற்ற தலைவராக இருப்பார்.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் பிரச்சினை இருப்பதாக திமுக சொல்கிறது. இதற்கு தண்டனையை மக்கள் கண்டிப்பாக கொடுப்பார்கள். இந்து மதத்தை சீரழித்து கேடு விளைவிக்க வேண்டும் என நினைக்கும் திமுகவை மக்கள் எதிர்ப்பார்கள்.

அதிமுக பாஜக கூட்டணி கடந்த தேர்தலில் 42 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. புதிதாக வந்தவர்கள் அதிகமான வாக்குகள் பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. இது ஆட்சி அமைப்பதற்கு போதுமானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. 2026-ல் பழனிசாமி மீண்டும் முதல்வராக வரப்போகிறார்.

எங்களுக்கு யாரைக் கண்டும் பயமில்லை. விஜய்யை கண்டு திமுகவுக்கு பயம் இருக்கலாம். விஜய் சார்ந்த வாக்குகள் பிரிந்துவிடும் என்று திமுக பயப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கு 4 மாதங்கள் உள்ளது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் மாற்றம் வரலாம். அதிமுக பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கரு.நாகராஜன்&nbsp;</p></div>
‘இது ஒரு வரலாற்றுத் தருணம்’ திருவனந்தபுரம் மேயராக பதவியேற்ற பாஜகவின் வி.வி.ராஜேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in