திருவனந்தபுரம்: பாஜக மாநிலச் செயலாளரும், கொடுங்கானூர் வார்டு கவுன்சிலருமான வி.வி.ராஜேஷ் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது கேரளாவில் பாஜகவின் அரசியலுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
கேரளாவில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் 50 பாஜக கவுன்சிலர்கள் மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலரின் ஆதரவுடன் 51 வாக்குகள் பெற்று, வி.வி.ராஜேஷ் திருவனந்தபுரம் மாநகராட்சியின் முதல் பாஜக மேயராகியுள்ளார். மேயர் தேர்தலில் யுடிஎஃப்-இன் கே.எஸ்.சபரிநாதனுக்கு 17 வாக்குகளும், எல்டிஎஃப்-இன் ஆர்.பி.சிவாஜிக்கு 29 வாக்குகளும் கிடைத்தன.
மேயராக தேர்வான பின்னர் ஊடகங்களிடம் பேசிய ராஜேஷ், "இது ஒரு வரலாற்றுத் தருணம். திருவனந்தபுரத்தின் அரசியல் மாற்றம் கேரளாவின் ஒட்டுமொத்த அரசியல் சூழ்நிலையையும் மாற்றும் என்று நான் நினைக்கிறேன். அனைவரையும் ஒன்றிணைத்து நாங்கள் முன்னேறிச் செல்வோம். 101 வார்டுகளையும் சமமாகப் பாவித்து வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். திருவனந்தபுரம் நாட்டின் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்றப்படும்" என்று அவர் கூறினார்.
மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுரேஷ் கோபி பேசுகையில், "திருவனந்தபுரம் மாநகராட்சியில் மோடியின் ஆட்சியின் வலிமையை நாங்கள் நிரூபிப்போம். இது கேரளாவில் மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் பேசும்போது, “காங்கிரஸின் மறைமுகமான ஆதரவுடன், சிபிஎம் திருவனந்தபுரம் நகரத்தை சீரழித்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த மாநகராட்சி ஊழலின் கூடாரமாகிவிட்டது. வடிகால், குடிநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் கூட கடந்த 45 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எங்கள் மேயர் ராஜேஷ் கூறியது போல், திருவனந்தபுரத்தை நாட்டின் முதல் மூன்று நகரங்களில் ஒன்றாக மாற்றுவதே எங்கள் இலக்கு. அதற்கான எங்கள் பணி இன்றே தொடங்குகிறது” என்றார்.