தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது

ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை
தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது
Updated on
1 min read

சென்னை: நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல், எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுக்கள் என பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது ஆண்டு முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இக்கூட்டத்தில், தமிழக அரசு வகுத்தளித்த ஆளுநர் உரையின் ஆங்கில பெயர்ப்பை ஆளுநர் வாசிப்பார். அதன்பின், அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் வாசிப்பார். அத்துடன், நிகழ்வுகள் நிறைவுபெறும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் அரசின் உரையை வாசிக்காமல், சில தகவல்களைச் சேர்த்தும், விடுவித்தும் வாசிப்பதுடன், புறக்கணிப்பதும் தொடர்கிறது. அதேநேரம், தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் வாசித்தவற்றைவிடுத்து, அரசு வகுத்தளித்த உரையை பதிவு செய்யும் நடைமுறை தொடர்கிறது. இந்தச் சூழலில்தான், இந்தாண்டு முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

பேரவையில் ஆளுநர் உரை முடிந்ததும், அந்த உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பான அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். இதில் விவாத நாட்கள், முதல்வரின் பதிலுரை குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். பெரும்பாலும், வரும் வெள்ளிக்கிழமை (ஐன.23) அல்லது சனிக்கிழமை (ஜன.24-ம் தேதி) வரை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில், தற்போதைய அரசு தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும்போது 2026-27-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். எனவே, ஆளுநர் உரை நடைபெறும் ஜன.20 அன்றே, அலுவல் ஆய்வுக்குழுவில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்தும் விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது
விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை - குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in