

அருண்ராஜ்
திருப்பூர்/ கோவை: நீட் தேர்வு ரத்து குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தவெக நிலைப்பாடு. நீட் ரத்து குறித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். தவிர சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்வோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இடம்தேர்வு குறித்து ஆலோசனை செய்துள்ளோம்” என்றார்.
முன்னதாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு முறைகேடுகள், ரத்து மற்றும் மறுதேர்வு போன்ற காரணங்களால் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அரசு உணர்ந்துள்ளது. இதற்காக தமிழக அரசு மனம் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மாணவர்கள் எவ்வித தவறான முடிவுகளும் எடுக்க வேண்டாம்.
ஏதேனும் மனஅழுத்தம் இருந்தால் 104 என்ற உதவி எண்ணைத்தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியை மாணவர்களின் பெற்றோரும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாசுபட்ட மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் ‘ஷிகெல்லா’ போன்ற நோய்களைத் தடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தீவிர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் தரம் மற்றும் தூய்மை முறையாகப் பேணப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பத்மினி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.