

கோப்புப் படம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தனித் தீர்மானம், வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவை எதிர்க்கும் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
தமிழக சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு தொடர்பான தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இத்தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது.
ஒரு மாணவர் 12 ஆண்டுகள் பள்ளியில் கற்ற கல்வியை விட, ஒரே நாளில் நடைபெறும் ஒரு தேர்வே அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது. இது கல்வியின் உண்மையான நோக்கத்துக்கும், பள்ளி கல்வியின் மதிப்புக்கும் முரணானது.
நீட் தேர்வு நடைமுறையில், தனியார் பயிற்சி மையங்கள்தான் பெரிதும் பயன்பெறுகின்றன. சமூக நீதியைப் பாதிக்கும், சம வாய்ப்பைக் குறைக்கும், மாநிலங்களின் தனித்துவத்தைப் புறக்கணிக்கும் எந்த ஒரு முயற்சியையும் எந்த ஒரு தேர்வையும் ஏற்க முடியாது என்பதே இந்த அரசின் நிலைப்பாடு.
தமிழகம் பல ஆண்டுகளாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி, நாட்டிலேயே முன்னோடியான பொது சுகாதார அமைப்பை உருவாக்கியுள்ளது.
எனவே மத்திய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, நீட் நுழைவு தேர்வு முறையை ரத்து செய்து, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ள வழிவகை செய்ய வேண்டும். நீட் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவதுதான். இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் இந்த தீர்மானத்தின் மீது பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், ஏ.வ.வேலு (திமுக) உட்பட உறுப்பினர்கள் பலர் ஆதரவாகப் பேசினர். மேலும், வி.முத்துராஜா (திமுக), ஓ.எஸ்.மணியன் (அதிமுக), டி.ராமச்சந்திரன் (இ.கம்யூ), ஆர்.செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்), சவுமியா அன்புமணி (பாமக) ஆகியோர் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பாஜக எம்எல்ஏ போஜராஜன் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.
எஃப்சிஆர்ஏ மசோதா: இதேபோல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சிஆர்ஏ) திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘எஃப்சிஆர்ஏ விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டையும் பாதிக்கும். இந்தச் சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவார்கள். இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த மசோதா தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசியதாவது:
அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான்: தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தப்படுவது பாதிக்கப்படும். இந்தச் சட்டம், சிறுபான்மையினரை முடக்கும் முயற்சியாகும்.
அமைச்சர் வன்னியரசு: முதலில் சிஏஏ கொண்டு வந்து முஸ்லிம்களை 2-ம் தர குடிமக்கள் ஆக்கினார்கள். தற்போது எஃப்சிஆர்ஏ மூலம் கிறிஸ்தவர்களை குறிவைத்துள்ளனர். கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களை அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.
எஸ்.ஆஸ்டின் (திமுக): இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று எங்கள் கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார். இந்தச் சட்டத்தால், சிறுபான்மையினரின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும். தொண்டு நிறுவனங்களின் உரிமை பறிபோகும்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): எஃப்சிஆர்ஏ சட்டத்தை வரவேற்கும் அதேநேரத்தில், சிறுபான்மையினரைப் பாதுகாக்க தேவையான திருத்தங்களைச் செய்து இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். வெளிநாட்டு நிதி மீதான கட்டுப்பாடுகளை வரவேற்கிறோம்.
எம்.போஜராஜன் (பாஜக): தற்போது இருக்கும் சட்டத்தில் சில திருத்தங்கள், மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. தேசத்துக்கு எதிரான செயல்களைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. எனவே. எப்ஃசிஆர்ஏ அவசியம் தேவை.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக): வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றால் அது பிரத்யேக வங்கிக் கணக்கு வாயிலாகத்தான் வரும். எனவே, இந்த நிதியைக் கண்காணிக்கலாம். எஃப்சிஆர்ஏ சட்டம் சிறுபான்மையின மக்களை மட்டுமல்ல; கல்வி, மருத்துவச் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்.
தொடர்ந்து ஆர்.செல்ல சுவாமி (மார்க்சிஸ்ட்), கே.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) ஆகியோர் தீீர்மானத்தை ஆதரித்து பேசினர்.
தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார். அதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.