

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தரிசன நேரம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்பு பலகை.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரவு 8 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசன வரிசை என மூன்று விதமான வரிசைகள் வழியாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தரிசன நேரம் தொடர்பாக, கோயில் நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
அதில், ‘கட்டண தரிசன வழியில் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கோயில் நிர்வாகம் தரப்பில் ‘இரவு 9 மணி வரை பக்தர்களை அனுமதித்தால், அவர்கள் தரிசனம் முடித்து வெளியே வர இரவு 11 மணி ஆகிவிடுகிறது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட இரவு 9 மணிக்குள் கோயில் திருநடையை சாற்ற இயலாத நிலை ஏற்படுகிறது. அதனாலேயே இந்த ஏற்பாடு’ என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கோயில் நிர்வாகம் சார்பில், நேற்று புதிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விசேஷ நாட்களில் தரிசன நேரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.