

வாஷிங்டன்: பிரதமர் மோடி மிகுந்த நெஞ்சுரம் கொண்டவர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்கஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எவ்வித நிபந்தனையும் இன்றி ஈரான் சரண் அடைந்திருக்கிறது. அடுத்த 60 நாட்கள் ஈரான் தரப்புடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதன் அடிப்படையில் இறுதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் உலகின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும். குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும்.
அமெரிக்கா, இந்தியா இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகள் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வர்த்தகம் தொடர்பாக பிரதமர் மோடியோடு பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம்.
அண்மையில் ஜி7 மாநாட்டில் பங்கேற்றேன். அப்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினேன். இதில் பிரதமர் மோடியை வியந்து பார்க்கிறேன். அவர் மிகுந்த நெஞ்சுரம் கொண்டவர். பிரதமர் மோடி தனது நாட்டின் நலனுக்காக தனது முழு சக்தியையும் பயன்படுத்துகிறார். அதேநேரம் அவர் மிகவும் அழகானவர், பண்பானவர், மென்மையானவர். அவர் ஒரு தேவ தூதரை போன்றவர். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். நான் வியந்து பார்க்கும் தலைவர்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒருவர். அவரது ஒவ்வொரு வார்த்தையும் வணிகம் சார்ந்ததாகவே இருக்கும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.