

திருப்பூர் எம்.பி.சுப்பராயன்
சென்னை: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனை இல்லாமல் மக்கள் விரோத சட்டங்களை மத்திய பாஜக அரசு அமல்படுத்த துடிப்பதாக திருப்பூர் எம்.பி சுப்பராயன் குற்றம்சாட்டினார்.
விலைவாசி உயர்வுக்கு முடிவு கட்ட வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். எல்லோருக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டும், பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பயண பரப்புரையை சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திருப்பூர் எம்.பி.சுப்பராயன் தொடங்கி வைத்தார். இதில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் எம்.பி. சுப்பராயன் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வரும் என மக்கள் இலவுகாத்த கிளிபோல் காத்திருந்தனர். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு புதிய லேபிள் ஒட்டப்பட்டுள்ளது.
தவெக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அனுகூலத்துக்காக மட்டும் வாக்குறுதி கொடுப்பது தவறு என்பதை இந்த பட்ஜெட் அனுபவத்தில் அரசு உணர்ந்திருக்கும். அதேபோல், மத்திய அரசை பொறுத்தவரை ஆட்சிக்கு வந்தவுடன் இனி நல்ல காலம் பிறக்கும் என்றனர். தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகள் இல்லாமல் மக்கள் விரோத சட்டத்தை அமல்படுத்த துடிக்கிறார்கள்.
அரசியல் சாசனத்தை அழிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் பயணத்தை தொடங்கி உள்ளோம். அடுத்த ஒரு வாரத்துக்கு நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.