

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து, திருப்பூர் அருகே வேலம்பட்டியில் நேற்று நடந்த மறியல் போராட்டத்தின்போது, தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீஸார்.
திருப்பூர்: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் அருகே வேலம்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.4 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால், போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை 340 கிமீ தொலைவுக்கு பூமிக்கடியில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், திருப்பூர் மாவட்டம் முத்தூரிலிருந்து கர்நாடக எல்லை வரை நெடுஞ்சாலை வழியாகவே குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிமீ தூரத்துக்கு மட்டும், நெடுஞ்சாலையைத் தவிர்த்து, விவசாயிகளின் எதிர்ப்பை மீறி விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து, திருப்பூர் - தாராபுரம் பிரதான சாலையில் உள்ள வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, 4 பெண் விவசாயிகள் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க முயன்றனர். போலீஸார், அவர்களைத் தடுத்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரையும் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். குழாய் பதிக்க நெடுஞ்சாலைப் பாதையைப் பயன்படுத்துவது குறித்து பேச வேண்டும். அதுவரை இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும்” என்றனர்.