

திருச்செந்தூர் கோயில்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கட்டண சேவைகள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்த்த, கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஜூலை 7 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தரிசன மற்றும் அபிஷேக கட்டணத்தை உயர்த்தி, கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தற்போதுள்ள கட்டண சேவைகள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசன கட்டணத்தை உயர்ந்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தங்கத்தேர் இழுக்க தற்போதைய கட்டணம் ரூ.2,500 என்பதை ரூ.5 ஆயிரமாகவும், நிரந்தர வைப்பு நிதி ரூ.50 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சமாகவும், சண்முகார்ச்சனைக்கு ரூ.5 ஆயிரம் என்பதை ரூ.30 ஆயிரமாகவும், நிரந்தர வைப்பு நிதி கட்டணம் ரூ.72 ஆயிரம் என்பதை ரூ.4.32 லட்சமாகவும், மூலவர் அபிஷேகத்துக்கு ரூ.1,500 என்பதை ரூ.10 ஆயிரமாகவும், ஒன்பது கால பூஜைக்கு ரூ.1,500 என்பதை ரூ.6,500 ஆகவும், நிரந்தர வைப்பு நிதி கட்டணம் ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.90 ஆயிரமாகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தனக்காப்புக்கு தற்போதைய கட்டணம் ரூ.100 என்பதை ரூ.1,000 ஆகவும், அபிஷேக சிறப்பு தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.500 என்பதை ரூ.2,500 ஆகவும், திருவிழா மற்றம் விசேஷ நாட்களில் ரூ.2 ஆயிரம் என்பதை ரூ.2,500 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டண உயர்வு குறித்து ஆட்சேபனைகள் இருந்தால், எழுத்து மூலமாக ஜூலை 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள், கோயில் இணை ஆணையரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் அதிர்ச்சி: பக்தர்கள் மத்தியில் இந்த கட்டண உயர்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கூறுகையில், ‘திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் உண்டியல் காணிக்கை, மாதந்தோறும் கோடிக்கணக்கில் வருகிறது. எனவே, கட்டணத்தை உயர்த்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடவுள் முன்பு அனைவரும் சமம். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கூடாது. இதனை நீதிமன்றங்கள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. கட்டண உயர்வால் சாதாரண பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.
கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது என்றனர். மேலும், ஏற்கெனவே அதிக பணம் கொடுத்துதான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. கட்டணத்தை பல மடங்கு உயர்த்தினால் சாமானிய மக்கள் சுவாமி கும்பிடமுடியாத நிலை ஏற்படும். கட்டண உயர்வை கைவிட வேண்டும். வசூல் நோக்கத்தில் இதுபோன்ற முடிவை எடுப்பது ஏற்புடையதல்ல.
அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் இறைவனை எளிதில் தரிசிக்க தகுந்த ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கருத்து தெவித்தனர்.