சென்னை: பொங்கல் சிறப்பு ரயில்களில் சிலவற்றில் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்தாலும், பல ரயி்ல்களில் டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருந்தது. பொருத்தமற்ற தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம், கட்டணம் அதிமுள்ள ஏசி ரயில்கள் போன்ற காரணங்களால் பல சிறப்பு ரயில்களில் முன்பதிவு இடங்கள் நிரம்பாமல் இருந்தன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்படும் வழக்கமான விரைவு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்துவிட்டது. இதையடுத்து, சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம் - கன்னியாகுமரி, தாம்பரம் - ராமேசுவரம், செங்கல்பட்டு - திருநெல்வேலி, எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - போத்தனூர், ஈரோடு - செங்கோட்டை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வழக்கமாக, முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து ரயில்களிலும், முன்பதிவு முடிந்து விடும். ஆனால், பல ரயில்களில் நேற்றுமாலை வரை முன்பதிவு டிக்கெட் நிரம்பாமல் இருந்தது.
4 ஏசி ரயில்கள்: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (ஜன.9), தாம்பரம் - நாகர்கோவில் (ஜன.12), தாம்பரம் - ராமேசுவரம் (ஜன.14), ஈரோடு - செங்கோட்டை (ஜன.13) உள்ளிட்ட சிறப்பு ரயில்களில், சில நிமிடங்களில் டிக்கெட் முடிந்தது. இருப்பினும், மற்ற விரைவு ரயில்களில் நேற்று மாலை வரை டிக்கெட் முன்பதிவு மந்தமாகவே இருந்தது.
அதாவது, திருநெல்வேலி - எழும்பூர் சிறப்பு ரயிலில் 320 டிக்கெட்டுகளும், நாகர்கோவில் - தாம்பரம் ஏசி ரயிலில் 964 டிக்கெட்களும் காலியாக இருந்தன. இதுபோல, கோவை - சென்ட்ரல் ரயில், ராமேசுவரம் - தாம்பரம்உள்பட பல ரயில்களில் போதியஅளவு டிக்கெட்கள் முன்பதிவாகாமல் இருந்தன. அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், 4 ரயில்களில் முழுமையாக ‘ஏசி’ ரயில்களாகவே இருந்தன. மேலும், வழக்கமாக செல்லும் மூன்றாம் ‘ஏசி’ வகுப்பு கட்டணத்தை விட ரூ.200 வரை அதிகமாகவே இருந்தது. மேலும், பயணிகள் அதிகமாக எதிர்பார்த்த 12, 13-ம் தேதிகளில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் வகையில், சிறப்பு ரயில்கள் இல்லை. இதனால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து, ரயில் பயணிகள் கூறும்போது, ‘‘பொங்கல் சிறப்பு ரயில்களில், 4 சிறப்பு ரயில்கள் ‘ஏசி’ ரயில்களாக இருக்கின்றன. இதில், சென்னை - திருநெல்வேலிக்கு ஒரு டிக்கெட் ரூ.1,300 கட்டணம். மற்றொருபுறம் பல சிறப்பு ரயில்கள் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு பொருத்தமற்ற தேதிகளில் இயக்கும் வகையில் இருக்கிறது. இது, சாதாரண பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது’’ என்றனர்.