

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் பேட்டை மாவட்ட வனப்பகுதியில் அம்மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பாமக உண்மையறியும் குழுவினர்.
தருமபுரி: கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருக்கும் உள்நோக்கத்தை வெளிக்கொணர, சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என பாமக-வின் உண்மையறியும் குழுவினர் வலியுறுத்தினர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்பேட்டை மாவட்டம் ஹனூர் வனப்பகுதியில் தமிழர்களான அந்தோணிசாமி உள்ளிட்ட 3 பேர் கடந்த 15-ம் தேதி கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வனத்தில் வேட்டையாட வந்த மூவரும் வனத்துறையினரை தாக்க முயன்றபோது வனத்துறையினர் சுட்டதால் உயிரிழந்தனர் என அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில், அங்கு நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதற்காக தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் எம்எல்ஏ-க்கள் வேலுசாமி, வெங்கடேஸ்வரன், நிர்வாகிகள் சண்முகம், அரசாங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் மஞ்சுநாத், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவை அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அனுப்பி வைத்தார்.
இக்குழுவினர், கடந்த 18-ம் தேதி நேரில் சென்று உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நடந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று அவர்கள் தருமபுரியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
சுட்டுக்கொல்லப்பட்ட அந்தோணிசாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42), குமார் (36) ஆகிய மூவர் மீது இதுநாள் வரை எந்த குற்ற வழக்கும் இல்லை. காணாமல் போன கால்நடைகளை தேடச் சென்ற அந்தோணிசாமி உறவினர்களையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
நீண்டநேரம் தேடியும் கால்நடைகள் கிடைக்காததால் இரவு வனத்திலேயே பாறைமீது படுத்து உறங்கியுள்ளனர். 15-ம் தேதி அதிகாலையில் அப் பகுதிக்கு வந்த வனத்துறை யினர் அவர்களுக்கு மிக அருகாமையில் நின்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
சற்று தொலைவில் படுத்திருந்த ஒரு நபர் மட்டும் தப்பி பிழைத் திருக்கிறார். அவர் மூலம்தான் வனத்தில் நடந்த தகவல் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.
தற்காப்புக்காக சுட்டதாகக் கூறும் வனத்துறையினர், குண்டு பாய்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைசூரு அரசு மருத்துவமனைக்கு 3 பேரின் உடல்களையும் சரக்கு வாகனம் ஒன்றில் அடுக்கி வைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.
மொத்தத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை. இது தொடர்பாக அண்டை மாநிலங்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் நடவடிக்கை தொடர்பாக தமிழகத்தில் இருந்து யாரும் அப்பகுதிக்கு நேரில் சென்று உண்மை நிலையை அறிய முயற்சிக்கக் கூடாது என்பது அம்மாநில அரசின் உள்நோக்கமாக தெரிகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் தான் அணை கட்டும் பகுதியும் அமைந்துள்ளது. கர்நாடக மாநில ஆளும் கட்சியும், அம்மாநில வனத்துறையும் திட்டமிட்டே இந்த கொலையை செய்துள்ளனர். குறிப்பாக கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் இந்த சம்பவத்தை முழுவதுமாக மூடிமறைக்க கர்நாடக அரசு முயற்சிக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பான உண்மை வெளிவர வேண்டுமெனில் தமிழக அரசு கோரியிருப்பதுபோல சிபிஐ விசாரணை வேண்டும்.
இந்த செயலில் ஈடுபட்ட வனத்துறையினரின் பெயர் பட்டியலை வெளியிட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். எங்கள் விசாரணை அறிக்கை அன்புமணி மூலம் உள்துறை அமைச்சர் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.