

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களை இணைக்கும் கும்மிடிப்பூண்டி - கூடூர் வழித்தடத்தில் 3, 4-வது புதிய ரயில் பாதைகள் ரூ.2,229 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ரயில்வே வலையமைப்பை வலுப்படுத்தவும், ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மேற்கு வங்கம், ஒடிஸா, தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் மொத்தம் 410 கி.மீ நீளத்துக்கு 4 முக்கிய பல வழித்தட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
மொத்தம் ரூ.9,450 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டங்கள் அனைத்தும் வரும் 2030-31-ம் ஆண்டுக்குள் முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை - கொல்கத்தா முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ள மிக முக்கியப் பிரிவான கும்மிடிப்பூண்டி - கூடூர் இடையே ரூ.2,229 கோடி மதிப்பீட்டில் 90 கி.மீ. தொலைவுக்கு 3, 4-வது புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன.
இந்த 4 திட்டங்களின் மூலம் 6,448 கிராம மக்கள் (சுமார் 60 லட்சம் பேர்) நேரடியாகப் பயனடைவார்கள். வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பு களும் அதிகரிக்கும். நிலக்கரி, இரும்புத் தாது, சிமென்ட், எஃகு,வாகனங்கள் மற்றும் உணவு தானியங்கள் விரைவாகக் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் கூடுதலாக ஆண்டுக்கு 76 மில்லியன் டன்கள் சரக்குகளைக் கையாள முடியும்.
ரயில் போக்குவரத்து அதிகரிப்பதால் நாட்டின் தளவாடச் செலவு குறைந்து, சுமார் 13 கோடி லிட்டர் எரிபொருள் இறக்குமதி தவிர்க்கப்படும். மேலும், 65 கோடி கிலோ கார்பன் உமிழ்வு குறைக்கப்படும். இது 2.60 கோடி மரங்களை நடுவதற்குச் சமமாகும்.
இந்த புதிய வழித்தடங்கள், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் பயண நேரத்தைக் குறைத்து, ரயில் சேவையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.