

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பேருந்து மோதியதில் ஒரே பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவடடம் சிவகாசி மேலத்தெருவைச் சேர்ந்தவர்கள்லிங்கம் மகன் கோகுல் (17). அவரது நண்பர்கள், மேலரத வீதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் பிரசன்னா (17), செந்தில்குமார் மகன் யுவராஜ் (17). இவர்கள் மூவரும் ஒரே பள்ளியில் பிளஸ் 2 படித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் ஒரே பைக்கில் சாத்தூரிலிருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்றனர். சாத்தூர் நான்கு வழிச் சாலையில் எதிர்திசையில் சென்றபோது, எதிரே கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் யுவராஜ், பிரசன்னா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கோகுல் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் அங்கு சென்று உடல்களை மீட்டு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் ஆம்ஸ்ட்ராங் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.