

பார்த்திபன் , எஸ். நித்திஷ், கே.நித்திஷ்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த மணியம்பட்டு ஏரியில் 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் திருவிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்.
இவரது மகன் பார்த்திபன் (13). இவர், அதே பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் எஸ்.நித்திஷ் (14).
இவர், சிப்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பும், கமலக்கண்ணன் என்பவரின் மகன் கே.நித்திஷ் (13), சிப்காட் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்களும் நேற்று காலை சிப்காட் அடுத்த மணியம்பட்டு ஏரி அருகே விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் ஏரியில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்ற 2 சிறுவர்களும் நிரில் மூழ்கினர்.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸார் சிறுவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.