

திருச்சி: திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.சரவணன் இன்று மாலை வெளியிட்டார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 27.10.2025 அன்றைய தேதிப்படி 9 தொகுதிகளில் 23,68,967 வாக்காளர்கள் இருந்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் பின் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி மொத்தம் 20,37,180 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் கண்டறிய இயலாதவர்கள் 44,276, இடம் பெயர்ந்தோர் 1,60,831, இறப்பு 1,16,756, இரட்டைப்பதிவு வாக்காளர்கள் 9,805, இதர 119 என மொத்தம் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக திருச்சி கிழக்கு 57,813, திருச்சி மேற்கு 57,339, குறைந்தபட்சமாக லால்குடி தொகுதியில் 19,312 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஆண்/பெண் பாலின விகிதாச்சாரம் 1,000 ஆண்களுக்கு 1057 பெண்கள் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 2,543 வாக்குச்சாவடிகள் இருந்தன. இந்திய தேர்தல் ஆணையம் 1,200 வாக்காளர்களைக் கொண்டு வாக்குச்சாவடிகளை சீரமைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,785 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், திருத்தல் படிவம்-6 மற்றும் படிவம்-8 உடன் உறுதிமொழி படிவத்தினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்திடலாம். இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் வாக்காளர்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தகவல் பெற்றுக்கொள்ளலாம்.
நாகை, திருவாரூர்: நாகை மாவட்டத்தில் எஸ்ஐஆர் திருத்தப் பணிக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆட்சியர் ஆகாஷ் இன்று வெளியிட்டார். அதன்படி, நாகை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிக்கு முன் இருந்த 5,67,730 வாக்காளர்களில், 57,338 பேர் நீக்கத்துக்குப் பிறகு, வரைவு பட்டியலில் 5,10,392 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 29,415 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வ.மோகனசந்திரன் வெளியிட்டார். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிக்கு முன் இருந்த 10,75,577 வாக்காளர்களில், 1,29,480 பேர் நீக்கத்துக்குப் பிறகு, வரைவு பட்டியலில் 9,46,097 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக, திருவாரூர் தொகுதியில் 37,937 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.