

மதுரை திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோயில் மலையடிவாரத்தில் மலைக்கு சென்ற கேரளம், தென்காசி பகுதி முஸ்லிம்களை போலீஸார் சோதனையிட்டனர்.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, அசைவ பிரியாணியை கொண்டுசென்ற கேரளம் மற்றும் தென்காசி முஸ்லிம்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் டிசம்பர் 3-ம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. மேலும், அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதனால், மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையிலான போலீஸார், தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர் கள் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தினர். அதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.
இதனிடையே, மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா சந்தனக்கூடு திருவிழா டிசம்பர் 21-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
19 நாட்களாக இருந்து வந்த போலீஸாரின் தடைகள் சந்தனக்கூடு திருவிழாவுக்காக அகற்றப் பட்டு, மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால், தினமும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் முஸ்லிம்கள் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவுக்குச் சென்று வருகின்றனர்.
இவர்களை போலீஸார் சோதனையிட்டு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், நேற்று கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் தென்காசி பகுதியைச் சேர்ந்த 62 பேர் பழனியாண்டவர் கோயில் மலையடிவாரத்திலிருந்து மலைக்குச் சென்றனர்.
அவர்களை தடு்த்து நிறுத்தி, அவர்கள் கொண்டுசென்ற பைகள், பாத்திரங்களை போலீஸார் சோதனையிட்டனர். அதில், அவர்கள் அசைவ பிரியாணி கொண்டு செல்வது தெரியவந்தது.
மலைக்கு மேல் அசைவ உணவுகள் கொண்டு செல்ல தடை உள்ளதாக தெரிவித்து, அவர்களை திருப்பி அனுப்பினர். ஆனால், அவர்கள் அருகிலுள்ள பள்ளிவாசலில் அசைவ பிரியாணியை வைத்து விட்டு மலைக்குச் சென்றனர்.
அப்போது, குழுவாக வந்த 62 பேரில் முதலில் 57 பேரை போலீஸார் அனுப்பினர். பின்னர், 5 பேர் அசைவ பிரியாணியை மற்றொரு இடத்தில் வைத்துவிட்டு, தாமதமாக தனியாகச் சென்றனர். போலீஸார் சோதனையில் அசைவ பிரியாணி கண்டறியப்பட்டதால், அங்கு திடீர் சர்ச்சை ஏற்பட்டது.