

மும்பை: காசா பற்றி கவலைப்படுபவர்கள், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது கபடநாடகம் என சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் திபு சந்திரதாஸ் (30) என்ற இந்து தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்.
இது குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கூறியதாவது: வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறை காட்டுமிராண்டித்தனமானது. இது படுகொலை. திபு சந்திரதாஸ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அறியாதவர்கள், அந்த செய்தி பற்றி படியுங்கள். வீடியோக்களை பார்த்து கேள்வி எழுப்புங்கள். இச்சம்பவம் நமக்கு கோபத்தை எழுப்பவில்லை என்றால் அது கபட நாடகம்தான். நமது சொந்த சகோதர, சகோதரிகள் எரித்துக் கொல்லப்படும்போது, நாம் உலகளவில் நடைபெறும் வன்முறைகள் பற்றி தொடர்ந்து கூக்குரலிடுகிறோம். மத தீவிரவாதத்தில் அப்பாவிகள் பலியாகிறார்கள். இதற்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை காஜல் அகர்வால் விடுத்துள்ள செய்தியில், ‘‘ வங்கதேசத்தில் மத தீவிரவாதத்தால் அச்சத்தில் வாழும் இந்து சிறுபான்மையினருக்கு துணை நிற்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மற்றும் முன்னாள் எம்.பி. ஜெயப் பிரதா விடுத்துள்ள செய்தியில், ‘‘வங்கதேசத்தில் அப்பாவி திபு சந்திரதாஸ் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இது சாதாரண வன்முறை அல்ல. கொடூர படுகொலை. இது இந்து மதத்தின் மீதான தாக்குதல். நமது கோயில்கள் அழிக்கப்படுகின்றன. பெண்கள் தாக்கப்படுகின்றனர். எவ்வளவு காலம் நாம் அமைதியாக இருக்க முடியும்? நாம் வங்கசேத சிறுபான்மையினருக்காக குரல் எழுப்பி உதவ வேண்டும். இந்த கொடூர சம்பவத்துக்கு நாம் நீதி கோர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.