

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ராட்சத பளுதூக்கி மூலம் கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரேநாளில் 2.17 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இதுதொடர்பாக, வஉசி துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையம் கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து 17,332 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு கையாண்ட 2 லட்சத்து 16,631 மெட்ரிக் டன் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதில், நிலக்கரி 62,466 டன், அனல்மின் நிலக்கரி 49,067 டன், சுண்ணாம்புக் கல் 20,671 டன், கந்தக அமிலம் 10,188 டன், பாமாயில் 5,400 டன், சர்க்கரை 1,771 டன், பொது சரக்குகள் 774 டன், காற்றாலை இறக்கைகள் 68 டன் மற்றும் 66,927 டன் சரக்குப் பெட்டக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த 2026 ஆகஸ்ட் மாதத்தில் 35.35 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது, ஆகஸ்ட் 2025 மாதத்தில் கையாளப்பட்ட 32.33 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், 9.36 சதவீதம் வளர்ச்சி ஆகும்.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், துறைமுகம் மொத்தமாக 18.27 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 2.10 சதவீத வளர்ச்சியாகும். துறைமுகத்தில் உள்ள உயர் திறன் கொண்ட நகரும் பளுதூக்கிகளின் பயன்பாடு, அதிக அளவிலான சரக்குகளை கையாள உதவியுள்ளது.
மேலும், எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக சரக்கு தளம்-7 நவீன சரக்கு பெட்டக முனையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சரக்கு தளம் 10 உருவாக்குதல், வடக்கு சரக்கு தளம்-3 இயந்திரமயமாக்கல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுங்க கட்டுப்பாட்டு பகுதி கூடுதலாக, 40 ஏக்கர் பரப்பில் விரிவாக்கப்பட்டு வருகிறது.
வஉசி துறைமுகம் இந்த சாதனையை எட்டுவதில் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியது. வரவிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவடைந்ததும், துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறன் மேலும் அதிகரித்து, கிழக்குக் கடற்கரையின் முக்கிய கடல்சார் நுழைவாயிலாக வலுப்பெறும். பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை துறைமுகம் வழங்கும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.