“பாஜக பின்னடைவின் துவக்கமே தர்மேந்திர பிரதான் பதவி விலகல்” - பெ.சண்முகம் உறுதி

பெ.சண்முகம் | கோப்புப்படம்
பெ.சண்முகம் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: ‘இளைஞர்கள் களத்தில் காட்டியுள்ள உறுதியே ஆட்சியாளர்களை அசையவைத்து தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்துள்ளது. கரப்பான் பூச்சி இளைஞர்கள் நடத்திய போராட்டம் நீட் கேள்வித்தாள் கசிவோடு சுருங்கி விடக் கூடியதல்ல. பாஜகவின் பின்னடைவின் துவக்கமாகவும் இந்த வெற்றி அமையும்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுமையும் கனன்று எழுந்த மாணவர், இளைஞர்கள் எழுச்சியின் பின்புலத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். மாணவர்களின் ஏக்கங்கள், உணர்வுகள், எதிர்பார்ப்புகளை மதித்து பதவி விலகுவதாக தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ரசிக்க முடியாத நகைச்சுவை ஆகும். மே 3 அன்று கேள்வித்தாள் கசிந்த பிரச்சினையில் இவர் பதவி விலக 86 நாட்கள் எடுத்துள்ளார்.

டெல்லியிலும் நாடு முழுமையும் போராடிய மாணவர்கள் மீது கடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பெல்லட் குண்டுகள் கூட அவர்கள் மீது பிரயோகப்படுத்தப்பட்டன. தேச விரோத குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முன் வைக்கப்பட்டன. இவ்வளவையும் மீறி பாலினம், மதம், சாதி பேதங்களைக் கடந்து மாணவர்கள், இளைஞர்கள் களத்தில் காட்டியுள்ள உறுதியே ஆட்சியாளர்களை அசையவைத்து அமைச்சரை பதவி விலக வைத்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது நிர்வாக ரீதியான தோல்வி மட்டுமல்ல. அது கல்வி வணிக மயமாவதன் வெளிப்பாடு. நீட் போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி என்பது பெருந்தொழிலாக மாறியதும், அதன் உப விளைவாக கேள்வித் தாள் கசிவு போன்றவை நிகழ்ந்தன என்பதே பிரச்சினையின் ஆணி வேர். கடந்த 12 ஆண்டுகளில் 152 தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு என்பது நிகழ்ந்திருக்கிறது.

இதனால்தான் மேலும் ஒன்றிய அரசின் "அதிகாரக் குவிப்பு" என்பதும் அகில இந்திய தேர்வுகளை அடுத்தடுத்து கல்விப் புலத்தில் திணிப்பதும் அரங்கேற்றப்பட்டது. கல்வி ஒத்திசைவுப்பட்டியலில் இருந்தாலும் மாநில உரிமைகளைப் பறிப்பதிலும், இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை சிதைப்பதிலும் பாஜக அரசு காட்டிய முனைப்பும் இப் பிரச்சினையில் பிரதிபலித்துள்ளது. இன்னும் கூட உழைப்புச் சந்தையின் குரூரம், கவுரவமற்ற பணி நிலைமைகள் ஆகியனவும் இளைஞர்கள் மத்தியில் ஆழமான காயத்தை உருவாக்கியுள்ளன.

ஆகவே "கரப்பான் பூச்சி" இளைஞர்கள் நடத்திய போராட்டம் ஒரு நீட் கேள்வித்தாள் கசிவோடு சுருங்கி விடக் கூடியதல்ல. கல்விப் புலத்தை நவீன தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்து சீரழித்து வருவதற்கு எதிராகக் குவிந்த கோபமும் குமுறலுமே வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டமாக இதை மாற்றியிருக்கிறது.

இப்போராட்டம் மக்களின் பேராதரவைப் பெற்று இருக்கிறது. இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி வர்க்க வெகுஜன அமைப்புகள் களத்தில் "கரப்பான் பூச்சிகள்" இயக்கத்திற்கு ஆதரவாக உறுதியாக நின்றிருக்கின்றன. இரவு நேரக் காத்திருப்பு போராட்டங்கள் நாடு முழுக்க பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்போடு நடந்தேறியுள்ளன.

தமிழ்நாட்டில் மாணவர்கள் கல்வி வளாகங்களிலும், பொது வெளியிலும் தீரம் மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளனர். தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் ஆதரவு இயக்கத்தை நடத்தியுள்ளன. கோவிட் காலத்திற்கு பின்னர் "நியோ நார்மல்" எனப் பேசப்பட்ட போராட்ட எதிர் மனோ நிலையை இப்போராட்டம் உடைத்திருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ள இவ்வியக்கம் பெரும் உற்சாகத்தைப் போராடுகிற அனைத்துப் பிரிவினருக்கும் தந்திருக்கிறது. பாஜகவின் பின்னடைவின் துவக்கமாகவும் இவ்வெற்றி அமையுமென்ற நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

டெல்லி ஜந்தர் மந்தர் உலகக் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு இப்போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள், இளைஞர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு மனதாரப் பாராட்டுகிறது. "கரப்பான் பூச்சி" இயக்கத்தை முன்னெடுத்த அபிஜித் திப்கே உள்ளிட்ட தலைமையையும் பாராட்டுகிறது. இது கொண்டாடத்தக்க வெற்றியாகும். நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.

இப்போராட்டம் இன்னும் விரிந்த களத்தில் தொடர வேண்டியுள்ளது. நவீன தாராளமய பொருளாதாரப் பாதைக்கு எதிரான போராட்டமாக இதன் பரிணாமம் அமைய வேண்டுமெனவும், அதற்கு இளைய தலைமுறை முன்வர வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

பெ.சண்முகம் | கோப்புப்படம்
தர்மேந்திர பிரதான் பதவி விலகியது தன்னலமற்ற சேவையின் உயர்ந்த நிலை: பாஜக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in