“இது ஒரு ‘வெற்றி’ மெகா ஊழல்” - மின்சார கொள்முதல் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

“இது ஒரு ‘வெற்றி’ மெகா ஊழல்” - மின்சார கொள்முதல் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
Updated on: 
2 min read

சென்னை: “தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்வது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. முந்தைய அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு வாங்க ஒப்பந்தம் போட்ட நிலையில், அதில் ஊழல் சந்தேகத்தை எழுப்பிய முதல்வர் விஜய், இன்று ரூ.35க்கு வாங்குகிறார் என்றால், இதை ஒரு வெற்றி மெகா ஊழல் என்றே சொல்லலாம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது.

இதற்கு முன் கடந்தகால ஆட்சியில், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அதில் ஊழல் நடந்ததாகக் குறிப்பிட்டு அந்த மின் கொள்முதலை இந்த அரசு ரத்து செய்தது.

இது தொடர்பாக தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. கடந்த மே 23-26 தேதிகளில் முந்தைய ஆட்சியில் போடப்பட்ட குறுகிய கால கொள்முதல் ஒப்பந்தங்களில் அதிக விலை மற்றும் ஊழல் சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி அந்த ஒப்பந்தங்களை தவெக அரசு ரத்து செய்தது.

இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்யவில்லை. ஆனால், இங்குள்ள தவெக அரசு இதைச் செய்கிறது. 5 நிறுவனங்கள் மூலம், சுமார் 4,400 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரத் துறை ஏற்கனவே கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இவர்களின் வெள்ளை அறிக்கையிலேயே ரூ.2.48 லட்சம் கோடி கடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு கடன் இருக்கும்போது, இவ்வளவு அதிக தொகைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு என்ன காரணம்?

கடந்த அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, இவர்கள் இவ்வாறு கொள்முதல் செய்கிறார்கள். மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற நிலையை மக்களிடம் உருவாக்கி இருக்கிறார்கள்.

இவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஒரு மாதத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது. அப்போதே, மின்சார கொள்முதலை மேற்கொண்டிருந்தால் குறைந்த விலைக்கு செய்திருக்க முடியும். ஆனால், திட்டமிட்டு 4 மாத காலமாக மின்கொள்முதல் செய்யாமல் இருந்துவிட்டு இப்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்குவது கடும் கண்டனத்துக்கு உரியது. இது ஒரு வெற்றி மெகா ஊழல் என்றே சொல்லலாம்.

ஆந்திராவில் அக்டோபர் மாதம் மின்கொள்முதல் செய்யப்பட்டது. அவர்கள் ஒரு யூனிட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே கொடுத்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ரூ.35 கொடுத்து வாங்குவது குறித்து மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. ஒரு கிலோ அரிசி ரூ.100க்கு விற்பனையாகிறது. பருப்பு, எண்ணெய், புளி என உணவுப் பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளன. இதனால், ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசு நிர்வாகத் திறமையற்ற அரசு என்பதற்கு இதுவே உதாரணம்.

பணபலம், அதிகாரபலம் இரண்டையும் வைத்துத்தான் இடைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. 2026 பொதுத் தேர்தலின்போது திமுக கூட்டணியை தவெக தலைவர் ‘கல்லாபெட்டி கூட்டணி’ என விமர்சித்தார். அந்த கல்லாபெட்டி கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகள்தான் விசிக, ஐயுஎம்எல், இடதுசாரிகள். அவர்களின் தயவால்தான் தவெக அரசாங்கமே அமைந்தது. இன்று முதல்வர் விஜய் முதல்வராக இருப்பதற்குக் காரணமே அந்த கல்லாப்பெட்டி கூட்டணிதான்.” என தெரிவித்துள்ளார்.

“இது ஒரு ‘வெற்றி’ மெகா ஊழல்” - மின்சார கொள்முதல் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
“அநியாய விலைக்கு மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” - பெ.சண்முகம் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in