

பெ.சண்முகம்
சென்னை: “தமிழக அரசும், மின்வாரியமும் அநியாய விலைக்கு கொள்முதல் செய்யப் போட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நியாயமான விலையில் கொள்முதல் செய்ய முன்வர வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இதுகுறித்து அக்கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு மின்சார வாரியம் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூபாய் 35 என்ற விகிதத்தில் கொள்முதல் செய்யவிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவில் இவ்வளவு அதிக விலைக்கு எந்த மாநிலமும், எந்த காலத்திலும் கொள்முதல் செய்ததில்லை. தற்போது பற்றாக்குறை நிலவுகிறது என்பது உண்மை. ஆனால், பல வாரங்களாகவே மின்வெட்டு இருப்பதை பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பல இயக்கங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதும் தமிழக அரசும், மின்சார வாரியமும் இவற்றையெல்லாம் மறுத்தே வந்திருக்கிறது. மின் பற்றாக்குறையை முன்கூட்டியே கணக்கிட்டு உரிய காலத்தில் தேவையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், மின்வெட்டை காரணம் காட்டி கொள்ளை விலைக்கு கொள்முதல் செய்வது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும். இந்தியாவில் பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ரூபாய் 2.45 லிருந்து 5.30 வரையே இருக்கிறது. தவிர்க்க முடியாத நிலையில் டீசல் மூலம் உற்பத்தி செய்தால் மட்டுமே அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும். அவை கூட விற்பனைக்கு வருவதில்லை. மாறாக, தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக அதைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், 35 ரூபாய்க்கு கொள்முதல் என்பது நம்ப முடியாததாகவும், அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை பயன்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனங்களுக்கு அரசுப் பணத்தை தாராளமாக அள்ளிக் கொடுப்பதுமாகும். ஏற்கனவே, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு என்று கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழக மக்கள் மீது மீண்டும் ஒரு சுமையை ஏற்றுவதற்கு வழிவகுப்பதாகும்.
எனவே, தமிழக அரசும், மின்வாரியமும் அநியாய விலைக்கு கொள்முதல் செய்யப் போட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு நியாயமான விலையில் கொள்முதல் செய்ய முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்பட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.