“சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் இந்த அரசு எதிர்க்கிறது” - அமைச்சர் சேகர்பாபு

“சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் இந்த அரசு எதிர்க்கிறது” - அமைச்சர் சேகர்பாபு
Updated on
3 min read

சென்னை: “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு. சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் இந்த அரசு அதை எதிர்க்கின்றது” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (07.12.2025) சென்னை, மண்ணடி அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலின் 5 நிலை ராஜகோபுரத்தினை உயர்த்தும் திருப்பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை, பூங்கா நகரில் தமிழ்நாட்டு திருக்கோயில் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை 4 கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதல்வரின் நல்வழிகாட்டுதலின்படி வரும் ஜனவரி மாதத்திற்குள் 4,000 திருக்கோயில்களின் குடமுழுக்கு நிறைவு செய்து இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஆன்மிக புரட்சியை அமைதியாக நடத்திக் கொண்டிருக்கின்றது,

சென்னை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.2.33 கோடி மதிப்பீட்டில் 20 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக திருக்கோயிலின் கிழக்கு இராஜகோபுரத்தை ரூ, 40 இலட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு தரை மட்டத்திலிருந்து 3 அடி உயர்த்தும் திருப்பணியை தொடங்கி வைத்தோம்.

இந்த அரசு பொறுபேற்ற பிறகு. உறுதித்தன்மை வாய்ந்த திருக்கோயில்கள், இராஜகோபுரங்கள் காலசூழ்நிலைக்கு ஏற்றார்போல் தரை மட்டம் உயர்ந்து இருக்கின்ற அளவில் அவற்றை இடித்து கட்டுவதற்கு பதிலாக பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற்று, அதன் உறுதிதன்மையை உறுதி செய்த பின் தாழ்வாக இருக்கின்ற திருக்கோயில்களை உயர் நிலைக்கு (லிப்டிங்) கொண்டு வருகின்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை 25 திருக்கோயில்களில் மேற்கொண்டது.

அதில் 11 திருக்கோயில்களின் பணிகள் நிறைவுற்றுள்ளன. இதர 14 திருக்கோயில்களில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு திருக்கோயிலான வியாசர்பாடி, இரவீஸ்வரர் திருக்கோயிலை உயர்த்தும் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் அந்த அத்திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் இன்றைய தினம் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் மேலும் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 2026 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆன்மிகம் சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் எந்த மாநில மக்களாக இருந்தாலும், பிற நாடுகளாக இருந்தாலும் உதவுகின்ற அரசுதான் திராவிட மாடல் அரசாகும். இலங்கையில் இயற்கை சீற்றத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை நேற்றைய தினம் முதல்வர் அனுப்பி வைத்ததை இந்த நேரத்தில் மனிதநேயத்தோடு கூற கடமைப்பட்டுள்ளேன்.

அதேபோல் ஆண்டுதோறும் ஐயப்பன் மலர் வழிபாட்டினை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி, அதில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐயப்ப மலைக்கு சென்று வருகின்ற 108 குருசாமிகளுக்கு பொன்னாடை மற்றும் ஐயப்பன் உருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலையையும் வழங்கி வருகின்றோம். இந்த ஆண்டும் ஐயப்பன் மலர் வழிபாடு விரைவில் கொண்டாடப்படும்.

தமிழகத்தை பொறுத்த அளவில் நான் பலமுறை சொல்லியது போல், ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகின்ற ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியினர் வட மாநிலங்களில் வேண்டுமென்றால் அவர்கள் நினைத்த மாதிரியான காரியங்கள், செயல்பாடுகள் ஈடேரலாம். ஆனால் இங்கு அவர்களின் கனவு பகல் கனவாக தான் இருக்கும். இது ராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணி காக்கப்படும். இது போன்ற செயல்களை நிச்சயம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மக்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நண்பர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

சனாதனத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டீர்கள், நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை, எந்த ஒரு பொருளையும் மையப்படுத்தி மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்று தான் கூறுகிறோம். சமாதானம் என்பது மிக உயர்ந்த வார்த்தை. அனைத்து நிலையிலும் மக்களை சமமாக பார்ப்பது, ஆகவே இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு. சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றதால் அதை எதிர்க்கின்றது இந்த அரசு.

பழங்காலத்தில் தரையில் பெல்டி அடிப்பது தரை பெல்டி என்றும், மேலே அடிப்பது மேல் பெல்டி என்றும் கூறுவார்கள். ஆனால் அதிமுகவினர் அடிக்கின்ற பெல்டி ஆகாய பெல்டியாகும். அந்த கட்சியின் பொதுச்செயலாளர் என்று சொல்பவர் முதலில் தனி நீதிபதியின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார், அவரை அடுத்து செய்தி தொடர்பாளராக இருக்கின்ற முன்னாள் அமைச்சர் ஏற்கனவே நீதித்துறை என்ன கூறியதோ அதை கையாள வேண்டும் என்று சொல்கிறார்.

ராஜன் செல்லப்பா அவர்கள் திருப்பரங்குன்றம் நிகழ்வில் நயினார் நாகேந்திரன் அவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு உட்பட்ட போது அவரை சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றார். அதேபோல் உள்ளதை உள்ளபடி சொல்லுகின்ற வல்லமை பெற்ற உள்ளூர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ நிலைப்பாடு ஒன்று. ஆகவே ஆளாளுக்கு ஒரு கோணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற அந்த இயக்கமானது கொள்கையை விட்டு முழுவதுமாக பாரதிய ஜனதா கட்சியிடம் அடிமைப்பட்டு விட்டது. ஊர் கூடி தேர் இழுத்தால் தான், வடம் ஒழுங்காக சென்றால் தான் நிலையை அடையும். இன்றைக்கு அதிமுகவின் நிலை அப்படியல்ல. ஆகவே அந்த தேர் 2026-ல் நிலையை அடையாது என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளை சான்றாகும்.

எச்.ராஜா அவர்களின் பேச்சையெல்லாம் ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நிலையில் பார்த்தால் நீதிபதிகளை தனக்கு தலை மேல் இருக்கின்ற பொருளை மையமாக வைத்து பேசுவார். சில நேரம் நீதிபதிகளை ஆதரித்து பேசுவார், அரசு அதிகாரிகளை காலணிக்கு ஒப்பிட்டு பேசுவார். இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பது எங்களைப் போன்ற நேர்மையாக, நல்லொழுக்கத்தோடு அரசியல் செய்பவர்களுக்கு சாபக்கேடாத கருதுகிறோம்.

திருப்பரங்குன்றத்தில் இந்த பிரச்சனையை கையில் எடுத்த பிறகு லட்சக்கணக்கான மக்கள் அந்த கிரிவலத்தில் பங்கேற்று உள்ளார்கள். இந்த அரசு முழுமையான பாதுகாப்பை பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கடையடைப்பு போராட்டம் என்று அறிவித்தார்கள். இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மக்களே திரண்டு அந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். விரோதி பட்டியிலில் இடம்பெற்று கொண்டே இருக்கின்ற தமிழ்நாட்டிலே இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை பௌர்ணமியன்று மாலை ஆதிபுரீஸ்வரர் கவசத்தை திறந்தார்கள். அன்றைய தினம் 50,000 மேற்பட்ட மக்கள் வருகை தந்திருக்கின்றார்கள். நான் அங்கு சென்றபோது பக்தர்களிடம் உங்களுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருகின்றோம். உங்களால் முடியவில்லை என்றால் உடன் வாருங்கள், நான் அழைத்துச் செல்கிறேன் என்றுதான் பக்தர்களிடம் கூறினேன். ஒரு சிறு அசம்பாவிதமும் நடைபெறாமல் நேற்று நிறைவு பெற்றுள்ளது. விஐபி தரிசனம் என்பது திருக்கோயிலில் அவரவர்களின் பணி நேரம் காரணமாகவும் தேவை காரணமாகவும் இந்த சூழல் அமைகிறது.

ஊடகங்கள் நெகட்டிவ்வான விஷயங்களை பற்றி பேசும்போது பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கூற வேண்டும். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதற்காக வருந்த மாட்டோம், கோபப்பட மாட்டோம். குறைகளை நிவர்த்தி செய்வோம். நேற்றைய தினம் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு தங்கத் தேரை ஒப்படைத்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன். ஆறு கிலோ மீட்டர் தூரம் அந்த ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடினாலும் லட்சக்கணக்கான மக்கள் கூடினாலும் அவர்களின் நலனை பாதுகாக்கும் அரசாக இந்த திராவிட மாடல் அரசு திகழும் என்று தெரிவித்தார்.

“சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் இந்த அரசு எதிர்க்கிறது” - அமைச்சர் சேகர்பாபு
‘எங்கள் அரசு ஆன்மிகத்துக்கு எதிரியா?’ - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in