

இடிந்து விழுந்த பள்ளி நடைமேடையின் கைப்பிடிச் சுவர் (உள்படம்) உயிரிழந்த மோகித்
திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் கொண்டாபுரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, மாணவ-மாணவியர் பள்ளி வளாகத்தில் சத்துணவு அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, 7-ம் வகுப்பு மாணவரான, கொண்டாபுரம் பகுதியை சேர்ந்த சரத்குமார் மகன் மோகித் (11), பள்ளி நடைமேடை பகுதியில் சத்துணவு அருந்தி கொண்டிருந்திருந்த போது, ஏற்கனவே விரிசல் அடைந்த, 4 அடி உயர கைப்பிடிச் சுவர் இடிந்து, மோகித் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த மோகித்தின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என, 200-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு, விரிசலடைந்த, நடைமேடையின் கைப்பிடிச் சுவரை அகற்ற, தலைமை ஆசிரியர் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? விரிசலடைந்த கைப்பிடிச் சுவர் அருகே மாணவர்களை உணவருந்த அனுமதித்தது ஏன்? என, அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, உயிரிழந்த மாணவர் மோகித்தின் உடலை, பிரேத பரிசோதனைக்காக பள்ளி வளாகத்தில் இருந்து,எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, திருத்தணி டிஎஸ்பி (பொறுப்பு) கந்தன், திருத்தணி கோட்டாட்சியர் கனிமொழி, ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, சுமார் 4 மணி நேரம் நீடித்த, பெற்றோர், பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
பிறகு, ஆர்.கே.பேட்டை போலீஸார், மாணவர் மோகித்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார், பள்ளி சுவர் இடிந்து விழுந்து, உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிவாரண உதவி: இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 7-ம் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் மோகித் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.