புதுடெல்லி / மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தின் போது, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட கோரி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கார்த்திகை திருநாள் அன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தர்கா உட்பட சில தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக நீதிபதிகள் கடந்த நவம்பர் 20-ம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை விதித்தனர். அத்துடன், நடப்பாண்டு கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவின் சில பகுதிகளைத் திரும்பப் பெறக் கோரி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கல் தூண் பாரம்பரிய மத வழிபாட்டுத் தலமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எந்தவொரு உரிமையும் அங்கீகரிக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள நீண்ட கால நடைமுறையை மாற்றும் வகையில் கட்டாய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதான வழக்கு 2027-ம் ஆண்டு ஜனவரி 2-வது வாரத்தில் இறுதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் 2026-ம் ஆண்டுக்கான இடைக்கால உத்தரவு வழங்குவது மேல்முறையீட்டு மனுக்களின் நோக்கத்தையே பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது. பாரம்பரிய இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் என்பதால் யாருக்கும் உரிமை மறுக்கப்படவில்லை. ஆனால், தர்காவுக்கு மிக அருகில் உள்ள இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்குவது மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும் காவல் துறை, சிஆர்பிஎப் பாதுகாப்பு மற்றும் ஊர்வலங்களுக்குத் தடை போன்ற கடுமையான ஏற்பாடுகள் தேவைப்படுவதே, அப்பகுதியில் உள்ள பதற்றமான சூழலையும், சட்டம் ஒழுங்கு அபாயத்தையும் காட்டுகிறது. எனவே, இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் நிலவும் மத நல்லிணக்கத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது.
நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட உள்ளதால், உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20-ம் தேதி உத்தரவின் 13 முதல் 20 வரையிலான பத்திகளுக்கு உடனடி தடை விதிக்க வேண்டும். சீராய்வு மனுவை நீதிமன்றத்தின் வழக்கமான விசாரணை அறையில் வாதிட அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு சீராய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருந்தது என்ன?
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 13 முதல் 20 வரையிலான பத்திகளில் கூறப்பட்டுள்ள விவரம்:
>> நவம்பர் 24-ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒருமுறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் அங்கீகரித்த குழுவினர் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். இந்த அனுமதி எந்த பாரம்பரிய, மத அல்லது சொத்துரிமையை அங்கீகரிப்பதாகாது.
>> மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அதிகாரியாகச் செயல்பட வேண்டும். மதுரை காவல் ஆணையர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மத்திய ரிசர்வ் காவல் படை உதவியைப் பெறலாம். பொதுமக்கள், பக்தர்கள் தீபத்தூணுக்குச் செல்ல அனுமதியில்லை. முழக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது. தொல்லியல் சின்னங்களுக்கு எந்த சேதமும் ஏற்படக் கூடாது. தர்கா உள்ளிட்ட பிற மத வழிபாடுகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது.
>> தீபத்தூண் என்பது பாரம்பரியமாக வழிபாடு நடத்தப்பட்ட இடம் என்றோ, அங்கு தீபம் ஏற்றுவது அத்தியாவசியமான மத வழிபாடு என்றோ உச்ச நீதிமன்றம் எந்த முடிவுக்கும் வரவில்லை. தீபத்தூணின் உரிமை, பாரம்பரியம், மத உரிமை உள்ளிட்ட விவகாரங்கள் இறுதி விசாரணைக்கு உட்பட்டவை.
>> இந்த முறை தீபம் ஏற்றுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியையோ, அதை செயல்படுத்துவதையோ எதிர்காலத்தில் பாரம்பரிய உரிமை, மத வழக்கத்தின் முன்னுதாரணம் அல்லது அந்த இடத்துக்குச் செல்லும் உரிமைக்கான ஆதாரமாக யாரும் பயன்படுத்த கூடாது. அடுத்த ஆண்டுகளில் இதேபோன்ற அனுமதியைக் கோருவதற்கும் இந்த உத்தரவு அடிப்படையாக அமையாது.
>> இந்த உத்தரவு நவ.24-ம் தேதி நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு மட்டுமே பொருந்தும். எதிர்கால ஆண்டுகளில் வழிபாடு நடத்தும் முறை அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினரின் உரிமைகளை இந்த உத்தரவு தீர்மானிக்காது.
>> உத்தரவைச் செயல்படுத்துவதில் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், இந்திய தொல்லியல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தீபம் ஏற்றும் நிகழ்வு அமைதியாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
>> சம்பந்தப்பட்ட அனைவரும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மத விழாக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பரஸ்பர மரியாதை, பொது அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு நடைபெற வேண்டும்.
>> தீபம் ஏற்றும் நிகழ்வு நிறைவடைந்த 3 நாட்களுக்குள், உத்தரவு முறையாகச் செயல்படுத்தப்பட்டது தொடர்பான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.