திருப்பரங்குன்றம் - சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்கு தடை கோரிய வழக்கு ஜன.2-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் - சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்கு தடை கோரிய வழக்கு ஜன.2-க்கு ஒத்திவைப்பு

Published on

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கை ஜனவரி 2-க்கு தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்.

மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கந்தூரி விழா நடத்தி அசைவ உணவு பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

பின்னர் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை அமர்வு, மலை உச்சியில் கால்நடைகளை பலியிடவும், அசைவ உணவுகளை பரிமாறவும் தடைவிதித்தும், இது தொடர்பான உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்தோ அல்லது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ தர்கா தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், டிசம்பர் 21 முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா தரப்பில் கந்தூரி மற்றும் சந்தனக்கூடு விழாவை நடத்துவதாகக் கூறி அது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா தரப்பில் கந்தூரி விழா நடத்த அனுமதி வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜோதி ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "ஏற்கெனவே மதுரை அமர்வு, மலை உச்சியில் கால்நடைகளை பலியிடவும், அசைவ உணவுகளை பரிமாறவும் தடைவிதித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, தர்கா தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்திரவிட்டார்.

அப்போது, அதுவரை தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு தனி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்து, ஜனவரி 6-ம் தேதி தான் விழா நடைபெற உள்ளது. 2-ம் தேதி தான் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, மனதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது என்று கூறி விசாரணையை ஜனவரி 2-க்கு ஒத்திவைத்தார்.

திருப்பரங்குன்றம் - சிக்கந்தர் தர்கா கந்தூரி விழாவுக்கு தடை கோரிய வழக்கு ஜன.2-க்கு ஒத்திவைப்பு
மீனம் ராசியினருக்கான 2026 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in