

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘திருப்பரங்குன்றம் மலையில் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கக் கூடிய தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது; தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நாம் பின்பற்ற வேண்டும்; முன்னுதாரணங்கள் இருக்க வேண்டும்; அந்த அடிப்படையில் திருப்பரங்குன்றம் தீபத் தூணிலே தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இன்று நீதியரசர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் சிலர் சென்று, பொதுமக்களுக்கு மட்டும் தடை விதித்து, தீபத் தூணிலே தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை சட்டத்துக்குப் புறம்பாக தந்திருக்கிறார்கள். எனவே, இதன் மீது தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய இருக்கிறது.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் தாங்கள் அனுமதி அளிப்பதாக நீதிபதிகள் சொல்ல வேண்டும். ஆனால், எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது. இதற்கு முன் ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் எல்லாம் யாருமே தீபத் தூணிலே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்த கோரிக்கை வந்தபோது, இது கூடாது; நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றுதான் சொன்னார்.
ஆனால், இன்று நீதியரசர்கள் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். தீர்ப்பை நாம் ஒன்றும் சொல்ல முடியாது; அதை கலங்கப்படுத்த முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு சட்டத்துக்கு முரண்பாடான ஒரு செயல் என்ற அடிப்படையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடர எங்களுக்கு முழு உரிமையும் உண்டு.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். யாரோ ஒருவர் அனுமதி கேட்டதால், அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்வது முழுக்க முழுக்கத் தவறு. இதுவரை இல்லாத ஒரு பழக்கத்தை, வழக்கத்தை நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக உள்ளே நுழைப்பது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. எனவே, இதை நாங்கள் எதிர்க்கிறோம்.
இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இல்லாத ஒரு வழக்கத்தை நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வி. ஒருசாரார் இதில் புகுந்து விளையாடப் பார்க்கிறார்கள். எனவே, இதை அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய எங்களுக்கு முழு உரிமையும் உண்டு’’ என தெரிவித்தார்.