

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும். இதனை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. எனவே, தனி நீதிபதி உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இதை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (ஜன.6) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, தீபம் ஏற்றுவதற்கான சில வழிகாட்டுதல்களையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நீதிபதிகள் தீர்ப்பின் விவரம் வருமாறு: 1996 நீதிமன்ற உத்தரவில் உச்சிப்பிள்ளையார் கோயிலிலும் மாற்று இடத்திலும் தீபம் ஏற்றலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை பின்பற்றி தேவஸ்தானம் மலை உச்சியில் உள்ள கல்தூண் எனக் கூறப்படும் தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு மத்திய தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்பட தமிழக அரசே காரணம். தீபத் தூண் விவகாரத்தில் அரசு, அரசியல் காரணங்களோடு செயல்பட்டுள்ளது. தீபத் தூண் தேவஸ்தான இடத்திலேயே உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண்தான்.
எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். மேல் முறையீடு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. தனி நீதிபதி உத்தரவுப்படி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். இதை மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும்.
ஆனால், தீபத் தூணில் தனிநபர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது. தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர்தான் தீபம் ஏற்ற வேண்டும்.
தனி நபர்கள், அரசியல் கட்சியினர், அரசியல் இயக்கத்தினர் யாரும் அங்கு தீபம் ஏற்றச் செல்ல கூடாது. தேவஸ்தானம் மட்டுமே செல்ல வேண்டும். ஒவ்வொரு கார்த்திகையிலும் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்திரவில் கூறியுள்ளனர்.