

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி: எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று தமிழ், ஆங்கிலம், இந்தியில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த முருக பக்தர்களின் நம்பிக்கைக்கு கிடைத்துள்ள முக்கியமான வெற்றியாக இதை பார்க்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட தமிழக அரசின் அணுகுமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம். இனிவரும் காலங்களிலாவது, இந்து விரோத போக்கையும், மத நம்பிக்கைகளில் தலையிடும் அணுகுமுறையையும் கைவிட்டு அனைத்து மக்களுக்கும் சமமான ஆட்சியைத் தமிழக அரசு வழங்க வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: கோடான கோடி முருக பக்தர்களின் எண்ணம் உச்ச நீதிமன்றத்தில் பிரதிபலித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்து விரோத சக்திகளின் சூழ்ச்சிகளை சூரசம்ஹாரம் செய்து குன்றத்தை மீண்டும் வென்றான் முருகன். குன்றம் எப்போதும் குமரனுக்கே.
வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை: நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு. ஆட்சியாளர்களுக்கு பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல. நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை. இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் அளிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடைமுறைப்படுத்துவது ஓர் அரசின் அடிப்படை கடமை. தமிழக அரசு கடந்த கால அணுகுமுறைகளில் இருந்து பாடம் கற்று, இம்முறையாவது எவ்வித தடங்கலுமின்றி உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்: முதல்வர் விஜய்தான் மாநிலத்தின் இந்த தலைகுனிவுக்குக் காரணம். மைனாரிட்டி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, கூட்டணி கட்சிகளின் கெட்ட எண்ணத்துக்குத் தமிழகத்தின் மானத்தை விற்றுவிட்டார். அதை மறைக்க எத்தனை பொய்கள், எத்தனை நாடகங்கள். அவரது முகத்திரையை உச்ச நீதிமன்றம் கிழித்து தொங்கவிட்டுள்ளது. இந்த வெற்றியை கொண்டாட அனைத்து கோயில்களிலும் முருக பக்தர்கள் தீபம் ஏற்றுவோம்.
தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்ஆர்.கோபால்ஜி: திருப்பரங்குன்றம், முருகன் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இந்துக்களின் நீண்ட நெடிய போராட்டத்தில் இன்று (நேற்று) மிக முக்கியமான மைல் கல். அரசியல் சக்திகளும், அதிகார வர்க்கமும் இந்துக்களுக்கு எதிராக நின்றாலும், இந்துக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழகத்துக்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது திமுக அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது திமுக அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது தவெக அரசு. இத்தனைக்குப் பிறகும் கூட முதல்வர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழகத்துக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
விசிக தலைவர் திருமாவளவன்: உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சீராய்வு மனுவை ஒருபொருட்டாகவே எடுத்து கொள்ளாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்? கார்த்திகை திருநாளன்று ஏற்ற வேண்டிய தீபத்தை தொடர்பில்லாத ஒரு நாளில் ஏற்ற ஆணையிடுவது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோவாகும். மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த மேலாதிக்கப் போக்கு பேரச்சத்தை அளிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவெறி அமைப்புகள் ஏற்கெனவே மக்கள் மத்தியில் வெறியூட்டும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மலையின் மீது எல்லோரும் தீபம் ஏற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பதற்றத்தை உருவாக்க கூடியதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை புறந்தள்ளி வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு தவறான முன்னுதாரணமாக வரலாற்றில் நிற்கப் போகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழகத்தின் அமைதி நிலை மீது நடத்தும் நேரடி தாக்குலாகும். திருப்பரங்குன்றம் மலை மீது தர்காவுக்கு சொந்தமான இடம், முருகன் கோயிலுக்கான இடம் என எல்லை பிரித்து பேசுவது, மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு துணை போகும் வாதமாகும். இத்தீர்ப்பு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: திருப்பரங்குன்றம் வழக்கு உத்தரவு மாநில அரசின் நிர்வாக வரம்பு மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். இந்த விவகாரத்தைத் தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் அச.உமர் பாரூக்: உச்ச நீதிமன்ற உத்தரவு மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகள், மக்களின் மத உரிமைகள் என பல்வேறு அடிப்படை கோட்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. மாநில உரிமைகளையும் கருத்தில் கொள்ளாமல் கோயில் நிர்வாகத்தை கலைப்பதும், மத்திய படையைக் குவிப்பதும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகும்.
மஜக தலைவர் தமிமுன் அன்சாரி: திருப்பரங்குன்றம் மலையில் தமிழக அரசு தெரிவித்துள்ள எல்லைக் கல்லில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்டுள்ள புதிய தீர்ப்பு இந்திய நீதித்துறையின் மீது கடும் சந்தேகங்கள், வருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.