

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அத்துடன், காலம் கடந்தாலும், இன்றைக்கே தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் இருந்து...
நீதிபதிகள்: தீபம் தொடர்பான பிரதான வழக்கு மீது இன்று விசாரணை கிடையாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மற்றும் இடையீட்டு மனுக்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தப்படும். இது இரண்டை தவிர வேறு எதைக் குறித்தும் விசாரிக்க மாட்டோம், எனவே, அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் இந்த விவகாரத்தை தாண்டி வேறு எந்த வாதங்களையும் முன் வைக்க வேண்டாம்.
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான முழு பொறுப்பும் ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டது. இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு அதிகாரியாக இருக்க வேண்டும் என மிகத் தெளிவாக உச்ச நீதிமன்றம் கூறியும்கூட ஆட்சியர் அதை வேண்டுமென்றே நிறைவேற்றாமல் இருந்திருக்கிறார்.
அறங்காவலர் குழுவானது ஆகம விதிகள், மரபுகள் என கூறி ஒரு தீர்மானம் நிறைவேற்றி தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மறுத்துவிட்டனர். அறங்காவலர் குழுவுக்கும் தீபம் ஏற்றுவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது, அறங்காவலர்கள் அப்படியே கூறுயிருந்தாலும்கூட அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மாவட்ட ஆட்சியருக்கு கிடையாது
அறங்காவலர் குழுவின் வார்த்தையைவிட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறைந்ததா?
அறங்காவலர் குழுவில் மொத்தம் 5 பேர் உள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள ரெஜினா என்பவர் இந்து மதத்தைச் சேராதவர், இன்னொரு நபர் தூணில் தீபம் ஏற்றக்கூடாது என போராட்டம் நடத்தியவர். இத்தகைய நபர்கள்தான் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அறங்காவலர் குழு உறுப்பினர்களின் தீர்மானத்தை எதையும் சரி பார்க்காமல் ஆட்சியர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தொல்லியல் துறையிடம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை முறையாக மேற்கொள்ளவில்லை.
கோயிலின் ஸ்தானிகர்கள், அறங்காவலர்கள் முடிவு குறித்து தங்களுக்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். தற்போதைய அறங்காவலர்கள் 5 பேரையும் பணியில் தொடர் அனுமதிக்கக் கூடாது. ஆட்சியர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்திகை திருநாள் 11 நாட்கள் நடைபெறும் என்பதால் மீண்டும் தூணில் தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக இடைக்கால மனுவும் தாக்கல் செய்துள்ளோம்
நீதிபதிகள்: இந்த விவகாரத்தில் கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கேட்கிறீர்களா? அல்லது சிவில் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கேட்கிறீர்களா?
மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்: இரண்டு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
தொல்லியல் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: இந்த விவகாரத்தில் ஒரு தரப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் ஒரு தரப்பு கல்தூணில் தீபம் ஏற்றக்கூடாது என்றும் கூறுகிறார்கள். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்கள் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மத நம்பிக்கை இல்லாதவர்கள்.
ஆனால், தொல்லியல் துறையினரான எங்களுடைய பணியை பொறுத்தவரை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியது. அதை செயல்படுத்த தயாராக இருந்தோம்.
ஆனால், மலை உச்சியில் உள்ள தீபத் தூணை ஆய்வு செய்ய எங்களை தமிழக காவல்துறை அனுமதிக்கவில்லை. கடந்த 24-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு தொல்லியல் துறையின் அதிகாரிகள் தர்கா அருகில் சென்றோம். அப்பொழுது அங்கிருந்த தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், மேற்கொண்டு எங்களை செல்ல வேண்டாம் என கூறிவிட்டனர்.
பின்னர் 4.15 மணி அளவில் கல்தூண் அருகே செல்ல முற்பட்டபோது அங்கு செல்லவும் காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கல் தூணை அடையவோ, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்யவோ முடியவில்லை. மாலை 5 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தொல்லியல் துறையினரை மலையிலிருந்து வெளியேறுமாறு காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும், தொல்லியல் துறையினர் மலைப்பகுதியிலேயே காத்திருந்தனர். அப்போதுதான் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையோ, சம்பந்தப்பட்ட பிற துறைகளோ எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கல் தூணை ஆய்வு செய்யாமலேயே தொல்லியல் துறையினர் இரவு 7.45 மணியளவில் மலை அடிவாரத்துக்கு திரும்பியுள்ளனர்.
இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் மிகவும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பதற்கான ஒரு உத்தியாகவே சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம். அதேநேரத்தில் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதால் நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டிய கடமையிலிருந்து விலக்கு கிடைத்துவிடாது என ஏற்கெனவே பல தீர்ப்புகள் உள்ளன.
எனவே, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் வாதங்களை கேட்பதற்கு முன்பாகவே, எந்த இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதோ, அதே இடத்தில் தீபத்தை ஏற்றச் செய்து, நீதிமன்ற அவமதிப்பை நிவர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
மனுதாரர் வி.ராமசுப்பு தரப்பு மூத்த வழக்கறிஞர் சாய் தீபக்: அறங்காவலர் குழுவின் அறிக்கையை காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் போனது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் சில குழப்பங்கள் இருக்கிறது என்று தமிழக அரசு சார்பில் சொல்லக்கூடும். அதை ஏற்கவே கூடாது.
உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு வரியையும் மிகத் தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறது. எனவே இதில் மதுரை மாவட்ட ஆட்சியரின் வாதங்களை கேட்பதற்குக்கூட எந்த அவசியமும் இல்லை. அவர் செய்திருப்பது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு. நவம்பர் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கோயில் அறங்காவலர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் முடிவெடுக்க எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. எனவே, அறங்காவலர்களின் ஒப்புதலுக்காக மாவட்ட நிர்வாகமும் மாநில நிர்வாகமும் காத்திருந்ததே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின்கீழ் தங்களுக்கு மத உரிமைகள் இருப்பதாக அறங்காவலர்கள் கடைசி நேரத்தில் கூறியுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணைகளில் இதுபோன்ற உரிமையை அவர்கள் கோரவில்லை.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அறங்காவலர்களிடம் மாநில அரசு எடுத்துரைத்திருக்க வேண்டும். அறங்காவலர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்றும், அவர்களின் முடிவுக்கு மாநில நிர்வாகம் கட்டுப்பட்டது என்றும் கூறப்பட்டால், அறங்காவலர்களும் தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்.
அறங்காவலர்கள் சட்டரீதியாக மாநில அரசால் நியமிக்கப்பட்டவர்கள்; அரசின் பணியாளர்கள் என்பது முக்கியமானது. எனவே, அறங்காவலர்களின் முடிவுக்காக காத்திருந்ததையே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கான காரணமாக மாநில அரசு முன்வைக்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் திருப்பரங்குன்றத்தில் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இதுபோன்ற ஒரு உத்தரவு வரும் என எதிர்பார்த்து, யார், யார் அதை எதிர்ப்பார்களோ அவ்வாறான நபர்கள்தான் அறங்காவலர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றாமல் தவிர்த்து விட்டால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சாதாரணமாக கடந்து போய்விடலாம் என அரசு நினைத்திருக்கிறது. எனவே, உடனடியாக குறிப்பிட்ட தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்: இந்த விவகாரத்தை வெறும் தமிழகம் சார்ந்த ஒரு விஷயமாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இந்த நாடு சட்டத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவுகள் செயல்படுத்தப்படாமல் போனால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
மூல மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன், வழக்கறிஞர் லக் ஷ்மன் ராஜா: தீபத் திருநாளுக்கு முன்புகூட தமிழக அமைச்சர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாது என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளனர். இதன்மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.
இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு ஆகும். டிசம்பர் 15-ம் தேதி வரை கார்த்திகை மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதுதான் மரபு. அந்த மரபின் அடிப்படையில் டிச.15-க்குள் எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்.
மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன்: உச்ச நீதிமன்றம் எங்களுக்கு கொடுத்த 3 நாள் அவகாசம் இன்று தான் நிறைவடைகிறது. ஆனாலும் உடனடியாக நாங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததற்கு காரணம், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை அதற்கான காரணத்தை உடனடியாக நீதிமன்றத்திடம் தெரிவித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
நீதிபதிகள்: எங்களது உத்தரவை செயல்படுத்தினீர்களா, இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் கூறுங்கள்.
ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்: ஆம். செயல்படுத்தினோம்.
நீதிபதிகள்: அப்படி செய்திருந்தால், எதற்காக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் வரப்போகிறது? இந்த விவகாரத்தில் இன்றைய தினமே நாங்கள் சில முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கப் போகிறோம்.
ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்: தொல்லியல் துறை அதிகாரிகளை நாங்கள் தீபத்தூணின் அருகே செல்ல விடவில்லை என்பது பொய்யான தகவல்.
தொல்லியல் துறை அதிகாரிகள் அந்த இடத்துக்கு போனதற்கு ஆதாரமாக புகைப்படங்களை தாக்கல் செய்திருக்கிறோம். அதில் தற்போது குற்றச்சாட்டு தெரிவித்து அறிக்கை கொடுத்துள்ள அந்த அதிகாரியும் இடம்பெற்றுள்ளார்.
தொல்லியல் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்த குறிப்புகளையும், எந்த நேரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது, எவ்வாறு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளோம்.
எனவே, தொல்லியல் துறையை கலந்து ஆலோசிக்கவில்லை, அவர்களை மலைக்குமேல் அனுமதிக்கவில்லை தீபத் தூணை ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை என்று கூறுவது அனைத்தும் பொய்.
உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்றுவதற்கு வழங்கிய அனுமதி ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே, பாரம்பரிய, மத அல்லது சொத்துரிமையை அங்கீகரிக்கும் வகையில் அந்த அனுமதி வழங்கப்படவில்லை.
மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட ஒவ்வொரு அதிகாரிக்கும் நீதிமன்றம் வழங்கிய பொறுப்புகள் என்ன, அவை நிறைவேற்றப்பட்டனவா என்பதை விளக்குகிறோம்.
தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில் செயல் அலுவலர், தொல்லியல் துறை மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையருடன் ஆலோசித்து, தீபம் ஏற்றும் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி விடவேண்டும் என்பதற்காக தீர்ப்பின் நகல் கிடைப்பதற்கு முன்பாகவே அதற்கான வேலைகளை தொடங்கி விட்டோம் நவ. 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் என்னென்ன கூட்டங்கள் நடத்தப்பட்டது, அதில் என்னென்ன விவாதங்கள் நடத்தப்பட்டது, என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது, யாருக்கு எப்போது கடிதம் எழுதப்பட்டது, அவர்கள் என்ன பதில் அளித்தார்கள் என்ற அனைத்து விவரங்களும் வெளிப்படை தன்மையுடன் பிரமாண பத்திரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள்தான் மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற வேண்டியது ஆட்சியர் என்ற முறையில் உங்களுடைய பொறுப்பு. ஆனால் கோயில் நிர்வாகம், அறங்காவலர்கள் உள்ளிட்டவர்களின் கருத்துகள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என கூறுவது அரசியலமைப்பின் சீர்குலைவு என்ற சிக்கலான நிலையை ஏற்படுத்தி விடாதா?
ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்: கோயில்களில் மரபுகள், ஆகம விதிகள் உள்ளிட்டவை கடைபிடிக்க வேண்டும். அதனால் கோயில் விஷயத்தில் அனைத்தையும் நிர்வாக ரீதியாக செயல்படுத்திவிட முடியாது.
சபரிமலை வழக்கை எடுத்துக் கொள்ளலாம். தற்போது வரை அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. அது நிர்வாக ரீதியாக நிறைவேற்றப்பட்டதா?
நீதிபதிகள்: இந்த வாதத்தை ஏற்க முடியாது. அறங்காவலர் குழு எந்த அடிப்படையில் கூடினார்கள்?
கோயில் நிர்வாக அதிகாரி தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா: அறங்காவலர் குழுவினர் அவர்களாகவே கூடினார்கள்
நீதிபதிகள்: இல்லை. அவர்களாக கூட முடியாது. அதற்கென்று ஒரு அதிகாரி முறைப்படி அழைப்பு விடுத்து அதன்படிதான் அவர்கள் கூடி ஒரு முடிவு எடுக்க முடியும். உங்கள் சட்டம் அதைத்தான் சொல்கிறது.
நிர்வாக அதிகாரி தரப்பு வழக்கறிஞர்: அறங்காவலர் குழு மதரீதியில் எடுக்கும் முடிவுகளில் நிர்வாக அதிகாரி தலையிட முடியாது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி: உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த விவகாரத்தில் மெரிட் அடிப்படையில் முடிவு எடுக்கவில்லை என்பதால் மரபுகள் மற்றும் ஆகம விதிகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளில் சில தளர்வுகளை அறங்காவலர் குழு தானாகவே எடுப்பதற்கான வழிவகை உருவாகி இருக்கிறது.
நீதிபதிகள்: நாங்கள் அப்படி கூறவில்லை. குறிப்பிட்ட தூணில் தற்காலிக நடவடிக்கையாக தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் தெரிவித்தோம். இதில் நீங்களாக புரிந்துகொண்டு அதை மாற்ற முயற்சிக்காதீர்கள்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: அறநிலையத்துறை சார்பில் ஆஜராகியுள்ள மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்த கருத்துகள் அடிப்படையிலேயே தெரிந்துவிட்டது, இவர்கள் வேண்டுமென்றேதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் போயிருக்கிறார்கள். எனவே, எந்த தாமதமும் இல்லாமல் இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுவேன் என்றுதான் கூறினேனே தவிர, அந்த குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்றுவேன் என்று கூறவில்லை. ஏனென்றால் தீபம் ஏற்றுவது எனது பணி கிடையாது. எனது அதிகாரமும் அதற்குள் செல்லாது.
நீதிபதிகள்: ஒரு நாளைக்கு எத்தனை பேர் தர்காவுக்கு வழிபட வருவார்கள்?
தர்கா நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர்: நூறு முதல் 200 பேர் வருவார்கள். இது தொடர்பாக உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கிறோம்.
நீதிபதிகள்: இந்தக் கேள்விக்கு எந்த காரணமும் இல்லை. தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறோம். யாராவது அரசியல் சாசன பிறழ்வுகளை செய்ய முயற்சித்தார்கள் என்றால் நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் நீர்த்துப் போகச் செய்ய முடியாது. இவ்வாறு வாதம் நடந்தது. தொடர்ந்து பல முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
உண்மையான கண்ணீரா? முதலைக் கண்ணீரா?
மதுரை காவல் ஆணையர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிடும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு என்பது தீவிரமாக வழங்கப்பட்டது. எந்த அசம்பாவித சம்பவங்களோ, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இல்லாமல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
24 சிறப்பு கம்பெனி படை வீரர்கள், 2,400 காவலர்கள், 1200 ஆயுதப் படை வீரர்கள், 332 ஊர்க்காவல் படை வீரர்கள், 61 டிஎஸ்பிக்கள், 130 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 5,797 பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நாங்கள் இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்கிறோம், நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா அல்லது முதலைக் கண்ணீரா என்பதை நாங்கள் விசாரித்து தெரிந்துகொள்கிறோம்” என்றனர்.