திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி : அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி : அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்
Updated on: 
2 min read

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இதன்படி ஆதரவு கருத்துகள் விவரம்:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பல ஆண்டுகளாக இந்துக்களின் கண்ணில் குடிகொண்டிருந்த ஏக்கம் பஞ்சாகப் பறந்துவிட்டது. மதநல்லிணக்கம் என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித் திட்டங்களை இத்தீர்ப்பு தவிடுபொடி ஆக்கியுள்ளது.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதில் மகிழ்ச்சி.

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு ஓரளவு மகிழ்ச்சி. விளக்கேற்றிய வெற்றித் தூணை நாம் பார்க்கப் போகிறோம் என்ற வகையில் மகிழ்ச்சிதான்.

பாஜக தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநில தலைவர் அர்ஜுனமூர்த்தி: நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், முழுமையாகப் பின்பற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதை ஒரு மதத்தின் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க அவசியம் இல்லை.

வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் நிரந்தர தீர்வு வழங்கும் என நம்புகிறோம்.

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி: தீபம் ஏற்றுவதால் யாருடைய உரிமையும் பறிபோகாது. அரசு கவுரவம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

எதிர்ப்பு - இதேபோல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தலைவர்கள் விவவரம்:

திமுக தலைவர் ஸ்டாலின்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி தமிழகத்தின் அமைதி, மதநல் லிணக்கத்தை நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்து என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்பதை விளக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: இத்தீர்ப்பு வியப்பும், அதிர்ச்சியும் அளிக்கிறது. மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்த இது வழிவகுக்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்: புதிய முறையை அறிமுகம் செய்வதும், சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்துவதும் ஆகும். இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வியப்பு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்: நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றுவது சரியல்ல என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்த நிலையில், இடைக்காலமாக தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு நியாயமற்றது. இதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா: தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது வரவேற்கத்தக்கது. ஆனாலும், சர்ச்சைக்குரிய இடத்தில் ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதி அளித்தது கவலை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மஜக தலைவர் தமிமுன் அன்சாரி: இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் இந்தச் சூழ்நிலையை நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.

எஸ்டிபிஐ மாநில தலைவர் உமர் பரூக்: இந்த தற்காலிக அனுமதி தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி : அரசியல் தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,760 குறைந்தது

X