தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,760 குறைந்தது

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,760 குறைந்தது
Updated on: 
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,760 குறைந்து, ரூ.92,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்கு சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வலிமையடையும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்கி குவிப்பது போன்ற காரணங்களால், கடந்த நவ.9-ம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக 11 மாதங்களுக்கு பிறகு, கடந்த 17-ம் தேதி சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் (ரூ.99,760) இறங்கியிருந்தது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்றும் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையானது. இது தங்கம் வாங்க நினைத்திருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.4,104 குறைந்து ரூ.1 லட்சத்து 448-க்கு விற்பனையானது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34,400 வரை உச்சத்தில் இருந்த நிலையில் நேற்றைக்கு ரூ.92,080-க்கு வந்துள்ளது. அதாவது ரூ.42,320 வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 11 நாட்களில் ரூ.13,960 வரை குறைந்திருக்கிறது.

இதேபோல் வெள்ளி விலையும் சரிவை கண்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.175-க்கும் நேற்று விற்கப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,760 குறைந்தது
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது ஏன்? - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

X